பாமகவிற்கு ஒதுக்கியதால் விரக்தி.. கும்மிடிப்பூண்டியில் அதிமுக பெண் நிர்வாகி சுயேட்சையாக வேட்பு மனு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் விரக்தி அடைந்த அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் லட்சுமி, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக சார்பில் சீட் கிடைக்காத நிர்வாகி ஒருவர் கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஆர்.லட்சுமி(52). இவர் 1991ம் ஆண்டு முதல் கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார்.

அதிமுக ஒதுக்கீடு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமையில் விருப்ப மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி
இதனால் விரக்தி அடைந்த அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, கும்மிடிப்பூணடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதன்படி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உதவி ஆட்சியர் ஜி. பாலகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுகவின் தொகுதி
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.லட்சுமி, 'நான் 1989ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறேன். கும்மிடிப்பூண்டி தொகுதியில் அஇஅதிமுக இதுவரை 8 முறை வென்றுள்ளது.

வாய்ப்பு தரவில்லை
அதிமுகவின் பலமான தொகுதியாக இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் பாமகவிற்கு ஒதுக்கியதால் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளளேன் என்றார். கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராக அதிமுக மகளிரணி ஒன்றி செயலாளர் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications