ஷாக்.. "உயிரை கொல்லும் காற்று மாசு.." சென்னையில் மட்டும் 28,674 பேர் மரணம்.. பெங்களூர் நிலையும் மோசம்
சென்னை: காற்று மாசு இப்போது உலகில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவின் டாப் நகரங்களில் இது பல ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் காற்று மாசு குறைவாக உள்ள சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் கூட உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் இப்போது காற்று மாசு தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு இல்லை. இதற்கிடையே இந்தியாவில் காற்று மாசால் ஏற்படும் மரணங்கள் குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

காற்று மாசு: இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் மாசு குறைவாக உள்ள இந்திய நகரங்களில் கூட பல ஆயிரம் பேர் காற்று மாசு காரணமாக முன்கூட்டியே பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். அதிலும் காற்று மாசு குறைவாக உள்ளதாக அறியப்படும் பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நிலவும் காற்று மாசு தொடர்பாக இந்தளவுக்கு விரிவான ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதில் நாட்டில் உள்ள டாப் 10 நகரங்களில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு காரணமாக சுமார் 33,000 பேர் உயிரிழப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 பேர் காற்று மாசு காரணமாகப் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள்.
டாப் நகரங்கள்: அதைத் தொடர்ந்து மும்பை (5,091 பேர்) மற்றும் கொல்கத்தா (4,678 பேர்) காற்று மாசு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவை எல்லாம் காற்று மாசு அதிகம் இருக்கும் நகரங்கள் தான். ஆனால், காற்று மாசு குறைவாக இருக்கும் நகரங்களில் கூட உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்துள்ளது.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களிலும் கூட உயிரிழப்புகள் அதிகமாகவே உள்ளதாக லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உச்சம்: இது தொடர்பாக அதில் மேலும் கூறுகையில், "PM-2.5 காற்று மாசு 48 மணி நேரச் சுழற்சியில் 10 மைக்ரோகிராம் அதிகரிக்கும் போது அது பெங்களூரில் உயிரிழப்பை 3% வரை அதிகரிக்கிறது. அதேநேரம் டெல்லியில் இது 0.3% மட்டுமே இறப்புக்களை அதிகரிக்கிறது. டெல்லியை விடப் பெங்களூரில் ஆபத்து பத்து மடங்கு அதிகமாகவே உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நாட்டின் டாப் 10 நகரங்கள்- அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியா, ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் ஆய்வு செய்துள்ளனர். இந்த 12 ஆண்டுகளில் நாட்டின் டாப் 10 நகரங்களில் ஏற்படும் மரங்களில் 7 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இந்த காற்று மாசு காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை நிலை: இதைக் கவலை தரும் விஷயம் என்னவென்றால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயம் செய்துள்ள அளவை விடக் குறைவாகக் காற்று மாசு இருக்கும் நகரங்களில் கூட உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உதாரணமாகச் சென்னையில் காற்று மாசு குறைவாக உயிரிழப்புகள் அதிகமாகவே உள்ளது.
சென்னையில் 2008 முதல் 2019 வரை 12 ஆண்டுகளில் காற்று மாசு காரணமாக 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக இந்த தி லான்செட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் இதைக் காலகட்டத்தில் 95,719 பேரும், கொல்கத்தாவில் 45,458 பேரும், மும்பையில் 30,554 பேரும் உயிரிழந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications