ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்!
சென்னை: காங்கிரஸ் தலைமை மீது ஹசீனா சையத் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஹசீனா சையத் மொழிப் பயன்பாட்டிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் மிகத் தாழ்ந்த நிலைக்கு அவர் இறங்கிவிட்டார் என விமர்சித்துள்ளார்.
சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அல்கா லம்பாவிடம், ஹசீனா சையத் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், நான் அவரை (ஹசீனா) தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கினேன். அது மிகப் பெரிய தவறு.

காங்கிரஸ் கட்சியில் இது போன்ற தலைமை பதவிக்கான வாய்ப்புகள் நிறைய பேருக்கு கிடைத்திருக்கிறது. பலருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது. ஆனால் அவர் காட்டிய குணம் அவரது மொழி பயன்பாட்டிலும் அரசியலிலும் எத்தனை தரம் தாழ்ந்த நிலைக்கு இறங்கிவிட்டார் என்பதையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தவர் ஹசீனா சையத். இவர் பல்வேறு விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசுபவர். அது போல் வட மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த போது கூட அதில் உள்ள பிரச்சினைகளை டிவி விவாதங்களில் அழகாக விவாதித்தார்.
இவரை அந்த பதவியிலிருந்து நீக்குவதாக அகில இந்திய காங்கிரஸ் மகளிரணி தலைவி அல்கா லம்பா அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஒரு பிரஸ் மீட் வைத்து தான் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் கட்சி தலைமையான கார்கே, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த புகார் கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 2026 சட்டசபைத் தேர்தலுக்கான சீட் ஒதுக்கீட்டில் எனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்து, நீண்டகாலமாக தான் நேசித்த கட்சியில் இருந்து வேதனையுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய தேர்தல் குழுவும் (CEC) உயர்நிலைத் தலைமையும் உறுதி அளித்தபோதிலும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டதே இந்த ராஜினாமாவுக்குக் காரணம்.
இது எனக்கு தனிப்பட்ட முறையில் மன வலியை ஏற்படுத்தியதோடு, கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டு கனவு வெறும் வெற்றுப் பேச்சாகிவிட்டது. நானும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த பல தகுதியான பெண்களும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கூட ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாலேயே ராஜினாமா செய்கிறேன்.
மகளிர் காங்கிரஸ் தலைவராக எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை ஆதரிக்கும் "ஊழல் நிறைந்த அமைப்பிற்கு" காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆதரவளிக்கிறார்.
எனது முறையீடுகள் பயனற்றதாகிவிட்டதாகத் தெரிவித்தார். ஏஐசிசி செயலாளர் திரு. ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி. சுதா, சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய திரு. புஷ்பராஜ், தற்போதைய தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதித் ஆல்வா போன்றோரும் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட்டனர்.
மாணவர் காங்கிரஸ் முதல் 2008 இளைஞர் காங்கிரஸ் 'திறமை கை' திட்டம் வரை, மூன்று தசாப்தங்களாக கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறேன். எனது கண்ணியமும் சுயமரியாதையும் சிதைக்கப்பட்டதால், எனக்கே நீதி மறுக்கப்படும் நிலையில் பொறுப்பாளர்களுக்கான 33% மகளிர் இட ஒதுக்கீட்டு உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை.
இதன் விளைவாக, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்கிறேன். காந்தி குடும்பத்தையும் கட்சியையும் என்றென்றும் நேசிப்பேன்.
காங்கிரஸ் தலைவரே, மாநிலத் தலைவரின் "ஊழல் நிறைந்த அமைப்புக்கு" துணைபோவது எப்படி? இது, உண்மையான தொண்டர்களை வெளியேற நிர்ப்பந்திப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அமைப்பை "சரி செய்ய முடியாத" நிலைக்குத் தள்ளி, பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
எனினும், கட்சி மற்றும் காந்தி குடும்பத்தின் மீதான எனது அன்பு தொடரும் என்று ஹசீனா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவரது குற்றச்சாட்டுக்கு எம்பி சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தனிப்பட்ட அதிருப்தி அல்லது ஏமாற்றத்தின் காரணமாக காங்கிரஸ் தலைமையைக் குறிவைப்பது முற்றிலும் முறையற்றது.
நிறுவனத்திற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல, அது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. ஆரம்பத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சியில் பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார். இந்த நிலையில்தான் அல்கா லம்பாவும், ஹசீனா கீழ்த்தரமாக இறங்கியுள்ளார் என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications