கூவத்தூர் முதல் குற்றாலம் வரை.. தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் வரலாறு!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலை கடந்த ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கிறது.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலை கடந்த ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கிறது. இந்த வழக்கில் வரலாறு தமிழக அரசியலில் பல காலத்திற்கு பேசப்படும்.
பலரும் எதிர்ப்பு அந்த புயல் தமிழக அரசியலில் இன்று வீச இருக்கிறது. தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நீதிபதி சத்யநாராயணன் இன்று இந்த தீர்ப்பை வழங்க உள்ளார். இந்த தீர்ப்பு கடந்த வந்த பாதை மிக நீண்டது.
[18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றால் எடப்பாடி அரசு தப்புமா? சட்டசபை பலம் என்ன?]

முதலில் என்ன நடந்தது
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஜெயலலிதா இறந்த உடன் இந்த பதவி ஏற்பு விழா நடந்தது. சில நாட்களில் அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அன்று அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரிய ஏற்பாடு
ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதிலாக சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலில் ஓ. பன்னீர்செல்வம் இதற்காக பதவி விலகல் கடிதம் கூட அளித்தார். ஆனால் பன்னீர்செல்வம், கடைசியில் மெரினா கடற்கரையில் சென்று தியானம் செய்து, மொத்த தமிழக அரசியலை புரட்டி போட்டார். அதுதான் தமிழக அரசியலில் வீசப்போகும் புயலுக்கு போடப்பட்ட முதல் விதை.

தர்மயுத்தம் தொடங்கியது
சரியாக 2 நாட்களில் 2017 பிப்ரவரி 7ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருந்தார். சசிகலா, தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததாக அவர் பரபரப்பு புகார் வைத்தார். அப்போதுதான் தர்மயுத்தம் தொடங்கியது. அதிமுக கட்சி சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரண்டு அணிகளாக கட்சி பிரிந்தது.

ஆட்சி மாற்ற முடிவு
ஆனால் சசிகலா தொடர்ந்து ஆட்சி மாறும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று உறுதியாக இருந்தார். இதனால் குதிரை பேரம் தொடங்கியது. கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். சசிகலா முதல்வராக பதவியேற்க முடிவெடுத்தார். ஆனாலும் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பல எம்எல்ஏக்கள் செல்ல தொடங்கினார்கள்.

சிறைக்கு சென்றார்
ஆனால் சசிகலா நினைத்தது நடக்கவில்லை. அவர் பதவி ஏற்க நினைத்த அதே சமயத்தில்தான், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. 2017 பிப்ரவரி 14ம் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதில் சசிகலாவிற்கு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவர் 10 வருடமும் அரசியலில் ஈடுபட முடியாமல் போனது.

பெரிய சபதம்
சிறைக்கு செல்லும் முன் சசிகலா ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்தார். அது இந்திய அரசியலில் மிக முக்கியமான ஒரு நாளாக மாறியது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதல்வராக தேர்வு செய்கிறார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி இல்லை.

இன்னொரு பக்கம் சென்ற வழக்கு
இந்த நிலையில் முதல்வரான பழனிசாமிக்கும் தினகரனுக்கு இடையில் சிறு சிறு மோதல்கள் வாக்குவாதம் வந்தது. அதே நேரம் பார்த்து இரட்டை இலை சின்னத்தின் வழக்கும் நடந்து கொண்டு இருந்தது. 2017ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று இரட்டை இலை சின்ன வழக்கில், லஞ்சம் கொடுத்தார் என்று டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

பிரிந்தவர் சேர்ந்தனர்
தினகரன் ஜெயிலுக்கு சென்ற வந்த நேரத்தில் எம்எல்ஏக்கள் எல்லோரும் பழனிச்சாமி பக்கம் சென்றனர். பின் சில நாட்களில் தினகரன் மொத்தமாக ஒதுக்கப்பட்டார். சில காலத்தில், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தது. அப்போதைய பொறுப்பு ஆளுநர் இவர்களின் கைகளை கோர்த்து இணைத்து வைத்தார். 2017 ஆகஸ்ட் 21ம் தேதியன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது.

முதல் அடி
அதன்பின்தான் எம்எல்ஏக்கள் வழக்கு தொடங்கியது. தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள், செப்டம்பர் 7ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் சென்று முறையிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் என்று எண்ணி, ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் புதுச்சேரி, கூர்க் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் என்ன கண்டது
செப்டம்பர் 18ம் அன்று தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவோம் என்று கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அப்போதைய எடப்பாடி ஆட்சி தப்பித்தது. இந்த ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்துவிட்டது.

வழக்கு நடந்தது
இதற்கு எதிராக எம்எல்ஏக்கள் எல்லோரும் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கு இடையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது. 2017 செப்டம்பர் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மறுஉத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும், அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீண்ட வழக்கு
அதன்பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டது. சென்ற வருடம் தொடங்கிய வழக்கில் விசாரணை 2018 ஜனவரி 23ம் தேதி வரை நடந்தது. அதன்பின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. பல மாதங்களாக இதில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.

இரண்டு தீர்ப்பு
சரியாக ஐந்து மாதங்களுக்கு பின் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இருவரும் வேறு வேறு தீர்ப்பு வழங்கினார்கள்.
- சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
- 18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கினார். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி சாத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்டது.

இன்று தீர்ப்பு
இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முடிவடைந்தது. அதன்பின் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் தங்கி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications