Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணாவின் ரிப்போர்ட்.. தமிழக அரசும் மத்திய அரசும் மோதிக்கொள்வது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாட்டின் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆனால் அதன் தொடர்ச்சியாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது டெல்லியில் இருந்து நொய்டாவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். தேசிய நினைவுச்சின்னங்கள் இயக்குனராகவும், தொல்பொருள் பணியின் (NMMA) இயக்குநராகவும் அமர்நாத் ராமகிருஷ்ணா, இப்போது தொல்பொருள் பணியின் இயக்குநராக மட்டுமே இருக்கிறார். கீழடி வரலாறு சர்ச்சை பற்றி விரிவாக பார்ப்போம்.


கீழடி அகழ்வாராய்ச்சி எப்போது தொடங்கியது?

சரி விஷயத்திற்கு வருவோம்.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கீழடியில் பள்ளிச்சந்தை திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் ஆய்வைத் தொடங்கியது. கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்திருந்தது.

Amarnath Ramakrishna on Keeladi Excavation Why the Centre and Tamil Nadu Government Remain at Odds

அதை தொடர்ந்து 2017 ஜனவரியில் தொடங்கிய இரண்டாம் கட்ட ஆய்வு நடந்து முடிந்தது. இதில் சுமார் 6000 தொல்பொருள்கள் கிடைத்தன. 'ஆதன்', 'உதிரன்', 'திசன்' எனத் தனிநபர்களின் பெயர்களைக் குறிக்கும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறித்த மண்பாண்ட ஓடுகள் அங்கு கிடைத்தன. இரும்பில் செய்த அம்புமுனைகள், தாமிரத்தாலான கண் மைத்தீட்டும் கம்பி, தந்தத்தில் செய்த தாயக்கட்டைகள், பளிங்கு, சூது பவளம், அகேட் மணிகள், எழுத்தாணிகள், பச்சை மஞ்சள் நீலநிறக்கண்ணாடி மணிகள், சுடுமண்ணில் உருவாக்கப்பட்ட பொம்மைகள், முத்திரைக்கட்டைகள், உறைக்கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள்கள் கீழடி ஆய்வில் கிடைத்தன. மேலும் கீழடியில்தான் சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள் மற்றும் கிணறுகள் உட்பட 7,500 க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை அந்த குழுவினர் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கீழடியில் கடந்த 2018ம் ஆண்டு 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தது. தமிழ் வரலாற்றில் சங்க காலமான கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது கார்பன் டேட்டிங் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதில் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டு திகைத்துப் போனார்கள். மிக முக்கியமாக, அகழ்வாராய்ச்சி தளத்தில் மதச் சின்னங்கள் எதுவும் இல்லை.

அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை

இதனிடையே 2014 மற்றும் 2016 க்கு இடையில் கீழடியில் தனது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்த 982 பக்க அறிக்கையை ராமகிருஷ்ணா சமர்ப்பித்திருந்தார். கடந்த மாதம் ஒரு புதிய சர்ச்சை வெடித்தது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அவரது அறிக்கையை திருத்துமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணா அதை செய்ய மறுத்துவிட்டார். ஆண்டுகளை திருத்த சொல்வது குறித்து கேள்விப்பட்ட தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்வினையாற்றியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக மாநில தொல்பொருள் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மாநில அமைச்சரே இந்த அளவிற்கு பேசுகிறார் என்றால், என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

கீழடி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது ஏன்?

கீழடியில் அதிநவீன நகர்ப்புற சமூகம் இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் இருந்தன
முறையான நகர்ப்புறத் திட்டத்தைக் குறிக்கும் கார்டினல் திசையில் நோக்கிய வலுவான கட்டமைப்புகள் இருந்தன. அதிக கல்வியறிவு பெற்ற சமூகத்தைக் குறிக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை காண முடிந்தது
சூரியன் மற்றும் சந்திரனின் கிராஃபிட்டி மக்களின் வானியல் சாஸ்திர அறிவினை காண முடிந்தது
ஒரு பெரிய சமூகத்தின் இருப்பைக் குறிக்கும் விதமான பகடைகள் இருந்தது.
ஆகவே, கீழடியின் கண்டுபிடிப்புகளை கண்ட தமிழ் வரலாற்றாசிரியர்களும் ஆர்வலர்களும், இதனை மேம்பட்ட பண்டைய தமிழ் நாகரிகத்தின் சான்றாகக் கண்டனர். ஆனால் அதற்கு பிறகு நடந்தது தான் கவனிக்க வேண்டிய பெரி மாற்றம்.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இடமாற்றம்

முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தபோதே அமர்நாத் ராமகிருஷ்ணாவை அஸ்ஸாமுக்கு மாற்றியது மத்திய அரசு. இவை அனைத்தும் 2017ம் ஆண்டிலேயே தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ​​தமிழ்நாட்டில் உள்ள அரசியல் விமர்சகர்கள் மத்திய அரசு வேண்டுமென்றே அகழ்வாராய்ச்சிகளைத் தடம் புரளச் செய்ததாகக் குற்றம் சாட்டினார்கள். மேலும் அகழ்வாராய்ச்சிகளுக்கு நிதி மற்றும் ஆதரவை உறுதியளித்த மத்திய அரசு, இரண்டாம் கட்டத்திற்குப் பிறகு இரண்டையும் தாமதப்படுத்தியதால் விமர்சனங்கள் எழுந்தன.

தமிழ் பாரம்பரியத்தை ஒடுக்க மையம் முயற்சிப்பதாக சிலர் குற்றம் சாட்டியதால், தமிழகத்தில் உணர்வு பூர்வமான பிரச்சனையாக கீழடி உருவெடுத்தது. இந்த சிக்கல் ஒருபுறம் எனில், அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு மாற்றாக பணியமர்த்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பி.எஸ். ஸ்ரீராமன், சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி செய்த பிறகு, முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டமைப்புகளில் எந்த தொடர்ச்சியும் இல்லை என்று ஸ்ரீராமன் தெரிவித்தார். வேண்டுமென்றே கீழடியின் முக்கியத்துவத்தை மத்திய அரசு குறைத்து மதிப்பிடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அகழ்வாராய்ச்சி இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடரவும், தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையை ஈடுபடுத்தவும் உத்தரவிட்டனர். மாநில தொல்பொருள் துறை அதையே செய்தது, மேலும் 2019 ஆம் ஆண்டில், கீழடி உண்மையில் கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 1 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு நகர்ப்புறக் குடியிருப்பு என்று அறிக்கையை வெளியிட்டனர்.

அகழாய்வின் மூன்றாம் கட்டத்திலிருந்து, தமிழக அரசின் மாநில தொல்பொருள் துறைதான் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது, ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை... மாறாக சிக்கல் அதிகரித்தது.

அமர்நாத் ராமகிருஷ்ணா அளித்த அறிக்கை

அமர்நாத் ராமகிருஷ்ணா ​​அகழ்வாராய்ச்சியின் முதல் இரண்டு கட்டங்கள் குறித்த தனது அறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. கீழடியில் மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது முதல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும், இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும், மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Amarnath Ramakrishna on Keeladi Excavation Why the Centre and Tamil Nadu Government Remain at Odds

மத்திய அரசு கேள்வி

இந்த அறிக்கை குறித்து 2 ஆண்டுகள் கழித்து சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை (மத்திய அரசு) எழுப்பியிருந்தது. அதன்படி, கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும், 2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின் (Accelerator Mass Spectrometry) படி உறுதிசெய்ய வேண்டும்.

முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் மத்திய அரசு கடிதத்தில் கூறியிருந்தது.மேலும் அறிவியல் ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் அமர்நாத் தந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும் என்றும், கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது என்றும், ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என்றும் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.

அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு

எனினும் அமர்நாத் ராமகிருஷ்ணா உறுதியாக நின்று தனது முடிவுகளை மீண்டும் திருத்த மறுத்தார். தொல்பொருள் தரநிலைகளின் அடிப்படையில் தனது பணியை அறிவியல் ரீதியாக சரியானது என்றும், அறிக்கையின் காலவரிசை ஸ்ட்ராடிகிராஃபிக் வரிசைமுறைகள், பொருள் கலாச்சாரம் மற்றும் முடுக்கி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) ஆகியவற்றின் படியே தயாரிக்கப்பட்டது என்றும் கடிதத்தில் கூறியிருந்ததாக கூறப்படுகிறது.

அறிக்கையை திருத்த வேண்டும் என்றும் ஆண்டுகளை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கடிதம் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின. ஆளும் கட்சியான, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வரலாற்றாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் உட்பட பலர் இந்திய தொல்லியல் துறையின் முடிவைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இது தமிழ் பாரம்பரியத்தை அடக்குவதற்கான அப்பட்டமான முயற்சி என்று அவர்கள் கூறியுள்ளனர். கீழடியின் முக்கியத்துவத்தை மத்திய அரசு ஒப்புக்கொள்ள மறுப்பது அறிவியல் மட்டுமல்ல, அரசியல் சார்ந்தது என்றும் அவர்கள் வாதிட்டு வருகிறார்கள்.

Amarnath Ramakrishna on Keeladi Excavation Why the Centre and Tamil Nadu Government Remain at Odds

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்

எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராமகிருஷ்ணனின் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப ரீதியாக நன்கு உறுதி செய்யப்படவில்லை என்றும், கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த கூடுதல் அறிவியல் ஆய்வுகள் தேவை என்றும் கூறினார். ஒரே ஒரு கண்டுபிடிப்பு முழு விவாதத்தையும் மாற்ற முடியாது என்று கூறியதுடன், கூடுதல் முடிவுகள், தரவு மற்றும் ஆதாரங்கள் வேண்டும் என்றார்.

தங்கம் தென்னரசு எதிர்வினை

இதற்கு கடும் எதிர்வினையாற்றி தொல்பொருள் துறையையும் வைத்திருக்கும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?" என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்" என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழ்நாடு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதன் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும் என்றும், பிரிவினை உணர்வுகள் மூலம் அல்ல என்று கூறினார். எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதில் மத்திய அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும், அத்தகைய ஆராய்ச்சி அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டால், தமிழகத்துடன் நிற்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார். இந்த அறிக்கையை அறிவியல் சமூகம் ஏற்றுக்கொள்ள, இன்னும் வலுவான சான்றுகள் தேவை என்றும் மேலும் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்று தனக்கு வியப்பாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.


அதிமுக அமைதி

கீழடி அறிக்கை பெருமையுடன் வெளியிட்டது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக தான். ஆனால் பாஜகவுடனான கூட்டணிக்கு பிறகு இப்போது அந்த விஷயங்களில் அமைதி காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கீழடி சர்ச்சை என்பது அகழ்வாராய்ச்சி பற்றியது மட்டுமல்ல; இது பல ஆயிரம் ஆண்டு சம்பந்தப்பட்ட மோதல். மத்திய அரசு அறிவியல் சரிபார்ப்பை வலியுறுத்துகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு கலாச்சார பெருமை மற்றும் வரலாற்று அங்கீகாரம் சார்ந்த விஷயமாக கருதுகிறது. மாநில அரசு தனது அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, அவை தற்போதும் நடந்து வருகின்றன. கீழடியில் மேலும் ஒரு புதிய அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதனை பலரும் பார்த்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+