விஜய்க்கு அம்பேத்கர் பேரன் ஆதரவு.. ஆளுநரால் தடுக்க முடியாது.. வெளியிட்ட சட்ட பாயிண்டுகள்
சென்னை: தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் த.வெ.க-வை ஆட்சி அமைக்கவும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவும் ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். த.வெ.க-விடம் பெரும்பான்மை பலம் இல்லை என்ற 'சந்தேகத்தின்' அடிப்படையில், விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநரால் தடுத்து நிறுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 164(2)-ன் கீழ், விஜய்யும் அவரது அமைச்சரவையும் சட்டமன்றத்தில் தங்களின் பெரும்பான்மையை நிரூபித்தால் போதுமானது என்றும் பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால், ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவருக்கு விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உள்ளது. ஏனெனில் அவர் அதிமுக ஆதரவை நாடவில்லை.. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது. மற்ற கட்சிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த சூழலில் ஆளுநர் 118 பேரின் ஆதரவுடன் வந்தால் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதாக கூறி விஜய்யை திருப்பி அனுப்பிவிட்டார்.

இந்த சூழலில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், " தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் த.வெ.க-வை, தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் மற்றும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவும் ஆளுநர் அழைக்க வேண்டும்.'த.வெ.க-விடம் பெரும்பான்மைக்கான பலம் இல்லை என்ற சந்தேகம்' இருப்பதைக் காரணம் காட்டி, விஜய்க்கான அழைப்பை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164(2) -ன் கீழ், விஜய்யும் அவரது அமைச்சரவையும் சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுத் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மட்டுமே அவசியமாகும்.இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன:
i) 1989 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, காங்கிரஸ் (I) கட்சி 194 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராமசாமி வெங்கட்ராமன் முதலில் அவர்களைத்தான் அழைத்தார், ஆனால் ராஜீவ் காந்தி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகு, தேசிய முன்னணியின் தலைவரான எனது நண்பர் திரு. வி.பி. சிங் அவர்களை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைத்தார், அவர் டிசம்பர் 2, 1989 அன்று இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.
1996 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் அதற்குப் பாதிக்கும் மேலான இடங்கள் (மெஜாரிட்டி) இல்லை, இது ஒரு தொங்கு நாடாளுமன்றத்திற்கு வழிவகுத்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, அடல் பிஹாரி வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார், வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால் மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாததால், 13 நாட்களுக்குப் பிறகு, மே 28, 1996 அன்று அவர் ராஜினாமா செய்தார்.தனிப்பெரும் கட்சி என்ற முறையில், த.வெ.க-வை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் முறைப்படி அழைக்க வேண்டும் மற்றும் விஜய் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். அவர் தனது பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்." இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications