மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா.. தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு 24 மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஒரு ஆண்டாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வந்தன.
இடையில் முதல் அலை சமயத்தில் குறைந்ததும் வைரஸ் பாதிப்பு குறைந்தது. இருப்பினும், 2ஆம் அலை பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

பள்ளிகள் திறப்பு
இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த செப். 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தது. சுழற்சி முறையில் வகுப்புகள், ஒவ்வொரு வகுப்புகளிலும் சானிடைசர், மாஸ்க் கட்டாயம் எனப் பள்ளி, கல்லூரி திறப்பிற்கு தனித்தனியாக வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.

ஆழ்வார்பேட்டை பள்ளி
அதேநேரம் மாணவர்களுக்கு இடையே வைரஸ் பாதிப்பு ஏற்படுவதும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டு, அங்குள்ள பிற மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 103 பேருக்கும் RT PCR சோதனை செய்யப்பட்டது.

24 மாணவர்களுக்கு கொரோனா
இதேபோல திண்டுக்கல் நகரில் தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே 10ஆம் வகுப்பு மாணவி ,செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு என பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பிற்குப் பின்னர் மாநிலத்தில், ஒட்டுமொத்தமாக இதுவரை 24 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய ஆலோசனை
மாணவர்களிடம் கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் இது குறித்து அரசு உடனடியாக தேவையான முடிவை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் சிலர், மாணவர்களுக்கு வேக்சின் போடும் பணிகள் நடந்து முடியும் வரை பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். இந்தச் சூழலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரஸ் பாதிப்பு குறைவு தான்
முன்னதாக, இது குறித்துப் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு குறைவான மாணவர்களுக்கே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பள்ளிகளை உடனடியாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல மாணவர்களுக்குப் பள்ளிகளில் இருந்து வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் அனைவருக்கும் RTPCR சோதனை எடுக்கவும் பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications