கொஞ்சம் யோசிச்சு பார்த்தா.. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அமித் ஷா இணைவார்.. தொல்.திருமாவளவன் பேச்சு
சென்னை: மோடியும் அமித்ஷாவும் மாய வலையில் சிக்கிக் கொண்டார்கள் எனவும் கொள்கை சார்ந்து மோடி சிந்தித்தால் நம் பக்கம் தான் வந்து நிற்க வேண்டும். கொள்கை அடிப்படையில் சிந்தித்தால் அமித்ஷா விசிகவில் சேருவார் என்று தொல் திருமாவளவன் பேசினார்.
அறநிலையத்துறை கோவில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:- கோவிலில் அனைவருக்கும் வழிபடும் உரிமை உள்ளது. அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

விழுப்புரம் மேல்பாதியில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் கோவிலை போலீஸ் பூட்டியுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பட்டியல் இனத்தவர் வழிபட உரிமை உள்ளதா? இல்லையா? கோவிலை பூட்டுவது தீர்வாகாது. சட்டப்படி செயல்பட்டு இருந்தால் கோவிலுக்கு அழைத்து சென்று இருக்கலாம். சமூக சிக்கலை காவல்துறை மேலும் சிக்கலாக்குகிறது.
இந்தியாவில் உள்ள பூர்வீக குடிகளுக்கு மொழி சொந்தமாக இருப்பதால் அவரவர்களுகு தேசியம் சொந்தமாக இருக்கிறது. இந்தி பேசுபவர்களுக்கு இந்தி நாடு என ஒன்று உள்ளது. தமிழ் பேசுபவர்களுக்கு தமிழ்நாடு உள்ளது. ஒவ்வொரு மொழியும் பேசுகிறவர்களுக்கு பூமி இருக்கிறது. மொழி அடிப்படையில் நாடு பிரிந்தால் நமக்கு பாதுகாப்பு உள்ளது. பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அவர்களுக்கு நாடு இல்லை. அவர்கள் பேசும் மொழி சமஸ்கிருதம். சமஸ்கிருத பூமி என எதாவது ஒன்று இங்கு இருக்கிறதா? ஒட்டுமொத்த பாரதத்தையே தனது தேசமாக்க பிராமணர்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் கையாளும் யுக்திதான் இந்துத்வா. அந்த மாயையில் போய் சிக்கிக் கொண்டவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும். பிராமணர்கள் விரித்த வலைக்குள் போய் சிக்கிக் கொண்டவர்கள் பதவிக்காக, அரசியல் லாபத்திற்காக சிக்கிக் கொண்டார்கள்.
கொள்கை சார்ந்து மோடி சிந்தித்தால் அவர் நம் பக்கம் தான் வந்து நிற்க வேண்டும். கொள்கை அடிப்படையில் சிந்தித்தால் அமித்ஷா விசிகவில் சேருவார். ஆனால், அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக உள்ளது. பிராமணர்களுக்கு இந்த மண்ணில் ஒரு தேசம் இல்லை. எனவே ஒட்டு மொத்த இந்தியாவை தேசமாக்க துடிக்கிறார்கள்.
அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 70, 75 ஆண்டுகள்தான் ஆகின்றன. பலநூறு ஆண்டுகளாக அல்லது ஈராயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணை கோலோச்சியது மனுஸ்மிரிதிதான். அதனால் தான், பாலியால் விவாகத்தை ஒரு ஆளுநர் நியாயப்படுத்துகிறார். 21 ஆம் நூற்றாண்டில் குழந்தை திருமணத்தை யாராவது ஆதரிப்பார்களா?
எனக்கு எந்த பாகுபாடும் கிடையாது. மக்களை மக்களாக பார்க்கிறேன். எளிய மக்களாக பார்க்கிறேன். எல்லாருக்குமான சமூக நீதிக்காக போராடுகிறேன். உன் சாதி என் சாதி என பார்க்கும் வேலை ஒருநாளும் எனக்கு கிடையாது. சமூக நீதி மீது நம்பிக்கையுள்ள திமுக ஆட்சி நிர்வாகத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்.
இதுதான் நான் அரசுக்கு முதல்வருக்கும் விடுக்கும் வேண்டுகோள். சட்டம் அனைவரையும் சமம் என்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை தருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 43 ஆயிரத்து மேற்பட்ட கோவில்களிலும் அறங்காவலர் குழுக்களை உடனே நியமிக்க வேண்டும் என சட்டசொல்கிது" என்றார்.












Click it and Unblock the Notifications