அக்மார்க் சுயநலவாதி.. பதவி ஆசை இருக்கலாம்; பதவி வெறி இருக்கக்கூடாது.. இபிஎஸ் பற்றி டிடிவி தினகரன்!
சென்னை: அதிமுக அக்மார்க் சுயநலவாதியின் கைகளில் சிக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக இருப்பதாக டிடிவி தினகரன் கூறி இருந்த நிலையில், தற்போது தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது.
யாருக்காகவோ எதற்காகவோ வானகரத்தில் பொதுக்குழு கூட்டப்படவில்ல; அமமுக பொதுக்குழுவுக்கு டிடிவி அழைப்பு

டிடிவி தினகரன் பேச்சு
அதேபோல் மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், எதையும் எதிர்பார்க்காலம் தன்னலமற்று இயங்கும் படை நம்முடன் உள்ளது.

அதிமுகவால் வருத்தம்
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அமமுக வெற்றிபெறும். அமமுகவின் வெற்றி தாமப்படுத்தலாமே தவிர, வெற்றியை தடுக்க முடியாது. தேர்தல் வெற்றி, தோல்வி என்னை பாதித்ததில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் அல்லல்பட்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பதவி வெறி
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய டிடிவி தினகரன், அதிமுக இப்போது அக்மார்க் சுயநலவாதியின் கைகளில் சிக்கியுள்ளது. பதவி ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறியோடு இருக்கிறார். ராஜதந்திரம் என்ற பெயரில், சொந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் பணம் கொடுத்து வசப்படுத்தும் நிலை வந்துவிட்டது.

தலைவர் பதவிக்கு தேர்தல்
எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவிகித ஆதரவு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் தலைமை பொறுப்புக்கு தேர்தலை வைக்க வேண்டியது தானே. வருங்காலத்தில் துரோகம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். அடுத்த ஆண்டில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறும். இங்குள்ள அனைவரும் தேர்வு செய்தால் தான் நான் இந்த இடத்தில் இருப்பேன். அதேபோல் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.