துண்டு வேண்டாம்.. துட்டு தான் வேண்டும்! அமமுக தொண்டர்களுக்கு டிடிவி வைத்த கோரிக்கை! என்னங்க ஆச்சு?
சென்னை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பொன்னாடைகள் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தவிர்த்து கட்சியின் வளர்ச்சிக்கு நிதியளிக்க வேண்டுமென அமமுக தலைமைக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் பொருளாளராக இருந்த டிடிவி தினகரன், டெல்லியில் நாடாளுமன்றத்தை பிரதிபலிக்கும் முக்கியமாக இருந்தார். அந்த காலத்தில் அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் தான்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதிமுக பொருளாளராகவும் இவர் இருந்த போது தான், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் திடீரென உச்சத்தை பெற்றார்.

டிடிவி தினகரன்
பின்னர் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவல் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில், நீண்ட காலம் அரசியல் வனவாசத்தில் இருந்தார். ஜெயலலிதா மறைவு வரை அதிமுகவில் அவரால் நுழையக் கூட முடியவில்லை. பின்னர் ஜெ மறைவுக்குப் பிறகும் மீண்டும் அதிமுகவில் இருந்த அவர், அணிகள் பிரிவின் போது எடப்பாடி அணியில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.

சுயேட்சை எம்.எல்.ஏ
பின்னர் அணிகள் இணைப்புக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் விசில் அடித்தார். ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவையே அலறவிட்டு நவீன நாகராஜ சோழனாக வலம் வந்தார். பின்னர் சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் அரசியலில் அவ்வளவாக சோபிக்காத நிலையில், தற்போது அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார் டிடிவி.

திடீர் அறிக்கை
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பொன்னாடைகள் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தவிர்த்து கட்சியின் வளர்ச்சிக்கு நிதியளிக்க வேண்டுமென அமமுக தலைமைக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தான் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. மிகப்பெரிய பின்னணி, அரசியல் செல்வாக்கு, பண பலம் கொண்டவராக கூறப்படும் டிடிவி தினகரனிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தொண்டர்களுக்கு வேண்டுகோள்
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலையிலுள்ள கழக நிர்வாகிகளுக்கும், அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கும் அன்பு வேண்டுகோள்"

பணமாக வழங்குங்கள்
கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மற்றும் கூட்டங்களிலும், நேரில் சந்திப்பவர்கள் இனி பொன்னாடைகள், பூங்கொத்துகள், பரிசுப் பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை கண்டிப்பாக தவிர்க்குமாறு அ.ம.மு.க கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக கழக உடன்பிறப்புகள், தங்களால் இயன்ற நிதியினை கழக வளர்ச்சி நிதியாக கழக பொதுச்செயலாளரிடம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நமது லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி நடத்திட உதவிடும்" என கூறப்பட்டுள்ளது.

தர்ம சங்கடம்
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் நிதி பெறுவது வழக்கம் தான் என்றாலும் அது கட்சி வளர்ச்சி நிதி தேர்தல் நிதி என்ற வகையில் ஒரு பொதுவான அறிவிப்பாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம் புத்தகங்களாக வழங்குங்கள் என அறிவிப்பதும் வழக்கம் தான். ஆனால் பரிசு பொருட்கள் வேண்டாம் அதனை பணமாக வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டு இருப்பது தொண்டர்களையே சற்று தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த அளவுக்கா கட்சியின் நிதிநிலைமை மோசமாக இருக்கிறது எனவும் அதிமுகவினரும், திமுகவினரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications