கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. தமிழக அரசு அமைதி காப்பது ஏன்? தவிப்பில் திருப்பூர் விவசாயிகள்
சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தகுதியானவர்களைக் கண்டறியும் கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.. முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணி, விவசாயிகள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. எனினும், இந்த நடைமுறைகள் அமலுக்கு வரும் வரை கடன் வசூல் செய்யும் கூட்டுறவு சங்கங்களின் அதிரடி நடவடிக்கைகளால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடியையும், நிச்சயமற்ற சூழலையும் எதிர்கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதியான கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில், கூட்டுறவு சங்கங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 ஏக்கர் நிலம் விவசாயிகள்
தமிழக முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த அறிவிப்பு திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போதைய கள நிலவரமோ தலைகீழாக உள்ளது. முறைப்படியான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே, கூட்டுறவு சங்க அதிகாரிகள் விவசாயிகளை வற்புறுத்தி நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி
இது குறித்து விவசாய சங்கத் தலைவர்கள் சொல்லும்போது, "அரசு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் வரை காத்திருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் முடிந்த பிறகு, கூட்டுறவு சங்கங்கள் அபராத வட்டியுடன் வசூலிக்க முயல்கின்றன.
ஏற்கனவே விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, 13 சதவீத அபராத வட்டி என்பது பெரும் சுமையாக அமையும். அரசு உடனடியாக இது குறித்து கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தி, கடன் வசூல் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு வாக்குறுதி
இதனிடையே, "கணக்கெடுப்பு" என்ற பெயரில் புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில், கூட்டுறவு வங்கிகள் நபாட் (NABARD) போன்ற அமைப்புகளிடம் கடன் பெற்று, மக்களிடம் திரட்டப்பட்ட வைப்புத் தொகையையும் சேர்த்தே கடனாக வழங்குகின்றன.
அரசின் தள்ளுபடி அறிவிப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், நிதி நெருக்கடியால் அவதிப்படும் கூட்டுறவு சங்கங்கள், தள்ளுபடித் தொகையை அரசு உடனடியாக வழங்காதது சங்கங்களின் செயல்பாட்டைப் பாதிப்பதாகக் குறிப்பிடுகின்றன.
விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தின் புகலிடமாகக் கருதி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், முதலமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைந்து அரசாணையை வெளியிட வேண்டும் என்றும், அதுவரை விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பழைய கடனை செலுத்தினால்தான்..
அதுமட்டுமல்ல, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 12 மாத காலக்கெடு தற்போது முடிவுக்கு வரும் சூழலில், புதிய வேளாண் பருவத்திற்கான கடனைப் பெறுவதற்கு முந்தைய பழைய கடனை முழுமையாக அடைத்தால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் விவசாயிகளுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்..
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாவட்ட வாரியாகப் பயனாளி விவசாயிகளைக் கண்டறியும் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதையடுதது, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், தாங்கள் எதிர்பார்த்த அந்தத் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்...!!












Click it and Unblock the Notifications