அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தில்.. கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்ப்பு.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது

மருத்துவக் காப்பீட்டு திட்டம்
தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டுத்தொகை ரூ.4 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் சேர்ப்பு
இத்திட்டத்தின் கீழ் சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு சேர்த்துள்ளது. இந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அரசு ஊழியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டு செலவுகள் ஈடு செய்யப்படும்.

52 மருத்துவமனைகள் சேர்ப்பு
இந்த நிலையில் தமிழக அரசின் ஊழியர்களுக்கான இலவச காப்பீட்டு திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்க்க தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்கும் கமிட்டி வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சலுகை
ஏற்கனவே காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்த 5 மருத்துவமனைகள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காப்பீட்டு திட்டத்தில் உள்ள ஓர் மருத்துவமனையில் கூடுதலாக சில சிகிச்சை முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனையின் பெயர் மாற்றத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தில் கூடுதலாக 52 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகையாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications