வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் போகலாம்.. அதிரடி ஆஃபரை அறிவித்த சென்னை மெட்ரோ! தேதியை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இதனையடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை, மற்றும் கூடுதல் நேரம் நீட்டிப்பு என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, டிசம்பர் மாதம் 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் Static QR, Paytm, whatsapp Phonepe மூலம் வெறும் ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒருமுறை பயணத்திற்கான பயண சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க இந்த முயற்சியை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அதேபோல CMRL பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications