அமித்ஷா எடுத்த பாமக சர்வே! அன்புமணியுடன் பாண்டா பரபர மீட்டிங்! அய்யாவுக்கு 2% பேர் தான் ஆதரவாமே!
சென்னை: தமிழக அரசியலில் பாமக - பாஜக - அதிமுக கூட்டணியிலான நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேற்று பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பின் போது, பாமகவில் 95% ஆதரவும் எங்களுக்கு தான் உள்ளது. சிலர் மட்டுமே வேறு நிலைப்பாட்டில் உள்ளனர் என பாண்டாவிடம் அன்புமணி உறுதியுடன் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக புதிய கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாகின. மேலும், பாமகவில் தந்தை-மகன் உறவில் ஏற்பட்ட இடைவெளி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு பேச்சுகள் கிளம்பின.

அன்புமணி ராமதாஸ்
பாஜக மற்றும் அதிமுக தரப்பை பொறுத்தவரை, பாமக ஒன்று திரண்டு இருந்தால்தான் கூட்டணிக்கு வலிமை சேரும் என கருதப்படுகிறது. இதனால், ராமதாஸ் - அன்புமணி இடையிலான பிரச்சனை தணியுமா என்று பாஜக அமைதியாக காத்திருந்தது. இதேவேளை, பாமகவில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்ற கேள்விக்கான பதிலை அறிய, அமித்ஷா தரப்பில் ஒரு சர்வே கூட நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள அக்கரையில் இருக்கும் தனது பங்களாவில் அன்புமணியை பைஜெய்ந்த் பாண்டா நேற்று (அக்டோபர் 16) சந்தித்து பேசினார்.
பைஜெயந்த் பாண்டா
அந்த சந்திப்பில், "பாமக இன்னும் NDA கூட்டணியில் தான் இருக்கிறது, எதிர்காலத்திலும் அந்த கூட்டணியில் இருந்தே நாங்கள் தேர்தல்களை சந்திப்போம்" என அன்புமணி தெளிவாக தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த பைஜெய்ந்த் பாண்டா, "பாமகவில் இளைஞர்கள் உங்களது பக்கமும், மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இருக்கிறார்கள் என்ற ரிப்போர்ட் எங்களிடம் வந்திருக்கிறது" என வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதற்கு அன்புமணி தன்னம்பிக்கையுடன், " பாமகவில் 95% ஆதரவும் எங்களிடம் தான் உள்ளது. சிலர் மட்டுமே வேறு நிலைப்பாட்டில் உள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் எங்களின் பக்கம் உறுதியாக உள்ளன. 2 சதவீத ஆதரவு தான் அய்யாவுக்கு உள்ளது" என உறுதியளித்துள்ளார்.
தொகுதி பேச்சுவார்த்தை
அதன்பின், தேர்தல் தொகுதிகள் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. "பாமகவுக்கு குறைந்தது 35 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். அதோடு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்கு பைஜெய்ந்த் பாண்டா, "தொகுதி ஒதுக்கீடு குறித்து மேலிடத்துடன் ஆலோசிக்கிறேன். ராஜ்யசபா இடம் குறித்து அதிமுக முடிவு செய்யும்" என கூறியுள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம்
அதே நேரத்தில், நடிகர் விஜயின் 'தமிழக வெற்றி கழகம்' கூட்டணியில் சேர்வாரா என்ற கேள்வியும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பைஜெய்ந்த் பாண்டா, "விஜய் தரப்பில் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை" என கூற, அன்புமணி, "விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு" என சுட்டிக்காட்டியுள்ளார். இருவருக்குமிடையேயான இந்த சந்திப்பு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணிக்குள் நடக்கும் அரசியல் சூழலை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications