Loan waiver: ரூ 75 ஆயிரம் போதாது சி.எம். சார்! பயிர்க் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ங்க! அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதாது, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது கடன் தள்ளுபடி தொகையை ரூ.75,000 உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பும் உழவர்களின் கடன் சுமையை போக்குவதற்கு போதுமானது அல்ல.

joseph vijay anbumani ramadoss

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.75000 வரை கடன் வாங்கிய சிறு , குறு மற்றும் பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் கூடுதலாக வாங்கிய விவசாயிகளின் கடனில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு பயன் கிடைக்கும். அதை விடுத்து 6.22 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35000 மட்டும் கடன் தள்ளுபடி செய்வது நியாயமல்ல.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கியக் கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. அதை நிறைவேற்றுவது தான் அறமாக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி, நபார்ட் வங்கி ஆகியவற்றின் விதிகளை காரணம் காட்டி உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது நியாயமல்ல. கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரு.2044 கோடி அளவுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது அதன் அளவு ரூ.5932 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் தள்ளுபடியை இந்த அளவுக்கு உயர்த்த அனுமதிக்கும் விதிகளும், நிதிநிலையும், குறைந்தபட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனையாவது முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்காதா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டிலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகவும், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+