நீர் நிலைகளில் வீடு கட்ட அனுமதி! அதிகாரிகளை ஜெயிலில் போடணும்! சஸ்பெண்ட் செய்வது வேஸ்ட்! -அன்புமணி
சென்னை: நீர் நிலைகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகளை முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இழந்து நிற்கதியாக நிற்கும் சூழலில் அன்புமணி இத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்த 250 ஏரி, குளங்களை காணவில்லை என அன்புமணி கூறியிருந்தார்.

சி.எம்.டி.ஏ. வில் சதுர அடிக்கு இவ்வளவு என லஞ்சம் நிர்ணயித்து நீர் நிலைகளில் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுக்கிறார்கள் என்றும் சதுர அடிக்கு 10 ரூபாய் என ஆரம்பித்து 150 ரூபாய் வரை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது போன்ற அதிகாரிகளை கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது, நீர் நிலைகளை அழித்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அன்புமணி ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் சி.எம்.டி.ஏ. வில் அடிக்கடி கள ஆய்வு நடத்தவும், கண்காணிக்கவும் போதிய ஆட்கள் இல்லை என்றும் பெயருக்கு இருப்பவர்களை வைத்துக்கொண்டு ஆய்வுக்கு செல்லாமலேயே அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அனுமதி கொடுத்ததன் விளைவே இந்த வெள்ளப் பாதிப்பு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது 2 பேரையாவது கைது செய்து சிறையில் அடைத்தால் தான் இனி வரும் நாட்களில் நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்ட எந்த அரசு அதிகாரியும் அனுமதி கொடுக்கமாட்டார்கள் என்றும் இனி வரும் காலங்களில் இந்தாண்டை போலவே இயற்கை சீற்றங்கள் வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் கூறிய இந்த விவகாரம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications