தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி இவ்வாறு கூறினார். புதிய அரசு ஆட்சி அமைந்து நாளையோடு ஒரு மாதம் ஆகிறது எனவும் அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறிய அன்புமணி, தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு முந்தைய திமுக அரசு போதிய மின் திட்டங்களை செயல்படுத்தாதே காரணம் என்றார்.
தமிழக முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் பல இடங்களில் குறைந்துள்ளது
"தவெக ஆட்சி அமைந்து நாளையோடு ஒரு மாதம் ஆக உள்ளது. நன்றாகச் செயல்பட்டு வருகிறார்கள். நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். நாம் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். ஊழல் பல இடங்களில் குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் இன்னும் மனம் மாறவில்லை. அவர்கள் மாற்றத்திற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்படும்.
ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மின்சார பிரச்சினை ஏன் என்று நான் சொல்கிறேன். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஒரு புதிய மின் திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. தற்போது நிலுவையில் உள்ள சுமார் 14 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மின்வெட்டுக்கு திமுக தான் காரணம்
தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் நுகர்வு 21 ஆயிரம் மெகாவாட். ஆனால் அரசு, தனியார் என அனைத்தையும் சேர்த்து 36 ஆயிரம் மெகாவாட் திறன் உள்ளது. அந்த 36 ஆயிரம் மெகாவாட்டில் 9 ஆயிரம் மெகாவாட் பருவகால மின் உற்பத்தியாகும். அதாவது காற்றாலை மின் உற்பத்தி மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய நான்கு மாதங்களில்தான் கிடைக்கும்.
திமுக ஆட்சியில் புதிதாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றில் ஒன்றாக 800 மெகாவாட் திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அரசு மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3 முதல் ரூ.3.50 வரை செலவில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அரசு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து ரூ.9 முதல் ரூ.15 வரை கொடுத்து வாங்கப்படுகிறது.
நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது
அதில் கமிஷன் அதிகம் கிடைப்பதால் அரசுக்கு சொந்தமாக மின் உற்பத்தி செய்யும் விருப்பம் இல்லை. அதனால்தான் இவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடி கூடுதல் வருமானம் மின் துறைக்கு வந்தும், அது நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. அதற்கு ஊழல்தான் காரணம்.
டிரான்ஸ்பார்மர் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை. அதையும் அவர் நேர்மறையாக எடுத்துக் கொண்டுள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications