அன்புமணியின் அடுத்த பிளான் என்ன? பாமக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு! இன்று நடக்கும் முக்கிய ஆலோசனை
சென்னை: பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நேரில் சந்திக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று முதல் நாளை மறுதினம் வரை நடக்க இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அன்புமணி - ராமதாஸ்
இந்த சூழலில், கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்புமணி ராமதாசின் தலைவர் பதவியை பறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 'கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்' என மன வேதனையுடன் பேசினார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
குறிப்பாக 35 வயதிலேயே அன்புமணி ராமதாஸை மத்திய கேபினட் அமைச்சராக்கியது தவறு என்றும் கூறி இருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி, செளமியா தான். இருவரும் தனது கால்களை பிடித்து கண்ணீர்விட்டு அழுதனர். பாஜக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், .அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை இன்று சந்திக்க உள்ளார். சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார். அன்புமணி ராமதாஸ் குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 நாட்கள் நேரில் சந்திக்கிறார்
அதன்படி, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நேரில் சந்திக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் வரை நடக்க இருக்கிறது.
இந்த சந்திப்பின்போது, பாமகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் சந்திக்க உள்ளார். 38 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் இந்த சந்திப்பில் கண்டிப்பாக பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார். ராமதாஸ் உடனான மோதலுக்கு நடுவே அன்புமணி விடுத்து இருக்கக்கூடிய ஆலோசனைக் கூட்டம் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications