மே மாதம் விடுமுறை! தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்
சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் கோடை விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினமாலா தலைமை வகித்தார்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்பட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியரும் ஊழியரும் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கிறது. மேலும் பல மையங்களில் சமையலரே, குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் உள்ளனர். இதுகுறித்து அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
அங்கன்வாடி மையங்களில் பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் போஷன் டிராக்கர் என்ற செயலியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மையங்கள், கிராமப்புறங்களில் உள்ளன.
அங்கு இணைய வசதி இல்லாததால், இந்த செயலியை பயன்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால் தினசரி 3 பயனாளிகளுக்கு கூட சத்துமாவு வழங்க முடியவில்லை. எனவே இந்த முறையை அரசு கைவிட வேண்டும்.
அது போல் கோடை காலத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடியவிடிய போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்கன்வாடி மைய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், முன்னறிவிப்பு இன்றி நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது.
இதனால், குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மூடப்பட்ட மையங்கள் மற்றும் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன; அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை வெயில் காரணமாக, அங்கன்வாடி மையங்களுக்கு, வரும், 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை, 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை வழங்கிய பின்னரும், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்ட விரோத செயல். உணவு பாதுகாப்பு சட்டப்படி, அங்கன்வாடி மையங்கள், 300 நாட்கள் செயல்பட வேண்டும். அதன் வாயிலாக, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் முன்பருவக்கல்வி வழங்கப்படுகிறது.
இருப்பினும், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாட்களின் போது, குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிச் செய்யும் வகையில், மே மாத துவக்கத்திலேயே சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, குழந்தைகள் நலனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications