ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை: தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத சூழலில், ராதாபுரம் தொகுதியில் தமிழிசையை களமிறக்கவும், மயிலாப்பூர் தொகுதியில் அண்ணாமலையை களமிறக்கவும் டெல்லி தலைமை ஆலோசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழிசை செளந்தரராஜன் தரப்பு பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. பிரச்சாரத்தின் ஒவ்வொரு நாளும் முக்கியம் என்று கருதி வேட்பாளர்கள் இரவு பகல் பார்க்காமல் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் பாஜக தரப்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்யவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அப்போது புதுச்சேரியில் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலையையும் அவசரமாக அழைத்தார். இதன்பின் கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த மையக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செம டோஸ் கொடுத்திருக்கிறார். பாஜகவுக்கு சாதகமாக 35 தொகுதிகளில் இருந்து வெறும் 10 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கி இருக்கிறது. யாருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்? சில தொகுதிகளை மாற்ற எடப்பாடியுடன் பேசுங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் உள்ளது. இனி மாற்ற முடியாது என்று கூறியதால், பியூஷ் கோயல் வேட்பாளர்கள் தேர்வு பக்கம் தலையை திருப்பி இருக்கிறார். அப்போது அண்ணாமலை மற்றும் எல்.முருகன் இருவரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக பியூஷ் கோயல் கூறி இருக்கிறார்.
அதற்கு அண்ணாமலை கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதியை ஒதுக்கினால் நான் போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் வானதி சீனிவாசன் முந்திக் கொண்டு, அது நான் போட்டியிடும் தொகுதி என்று கூறி இருக்கிறார். இதனால் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று அண்ணாமலையிடம் கேட்டுள்ளார்.
அதற்கு தமிழிசை செளந்தரராஜன், மயிலாப்பூரில் நான் போட்டியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பியூஷ் கோயல், வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன் ஏன் பணிகளை தொடங்கினீர்கள் என்று மறுகேள்வி கேட்டுள்ளார். இதனால் ஒரு நிமிடம் தமிழிசை செளந்தரராஜன் பரபரப்பாகி இருக்கிறார்.
பியூஷ் கோயலின் கேள்விக்கான பின்னணியில் சில விஷயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ராதாபுரம் தொகுதியை தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒதுக்கிவிட்டு, மயிலாப்பூரில் அண்ணாமலையை களமிறக்கலாம் என்று பாஜக யோசிப்பதாக பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் நாளை மறுநாள் மோடி பயணத்திற்கு முன் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட கமலாலயம் தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications