கரங்கள் இணைந்தாலும்.. மனங்கள் இணையவில்லையே! அப்செட்டில் அண்ணாமலை! அடுத்து தான் இருக்கு கச்சேரியே!
சென்னை: கடந்த சில தினங்களாக மீண்டும் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கிறார் அண்ணாமலை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். நேற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் இருந்து தொடங்கினார். அதில் அண்ணாமலை உள்ளிட்ட பல முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை நான் பாஜகவில் சாதாரண தொண்டனாக இருக்கிறேன்.. எனவே என்னால் இப்போதைக்கு எதுவும் பேச முடியாது. ஆனால் நான் பேச வேண்டிய நேரம் வரும் அப்போது எல்லாத்தையும் கொட்டித் தீர்ப்பேன் எனக் கூறியிருந்தார். அதாவது கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தன்னை யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்ற கோபம் அண்ணாமலைக்கு இருக்கிறது எனவும், அதனைத் தான் தற்போது அவர் பேட்டியின் மூலம் வெளிக்காட்டி வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி வகித்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை பதவி நீக்கப்பட்ட பிறகு, அவர் தீவிர அரசியல் நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொள்ளாமல் அமைதியாகவே இருந்து வந்தார். இதனால், அவருக்கு மீண்டும் எந்த பதவி வழங்கப்படும் என்ற ஆர்வம் பாஜக வட்டாரங்களில் எழுந்திருந்தது.

அண்ணாமலை அதிருப்தி
அதே சமயம், முன்னாள் மாநில தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராகவும், எல். முருகன் மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில், அண்ணாமலைக்கும் பெரிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாதது, அவரின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி 3 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்வதற்கு அண்ணாமலையின் பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்தது.
பாஜக உள்கட்சி
அதனால், அவருக்கு முக்கியமான பதவி வழங்கப்படாதது ஏன் என பாஜக வட்டாரங்களில் கேள்விகள் எழுந்தன. இதேபோல், கடந்த மாதம் டெல்லியில் நடந்த பாஜக தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற விழாவிற்கும் அவர் வரவில்லை. இதனால், அவர் தலைமையிடம் அதிருப்தியில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், "எனக்கு பாஜக தலைமையிடம் எந்த அதிருப்தியும் இல்லை. இது தவறான செய்தி," என்று அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்.
தமிழக பாஜக
அதற்குப்பின், சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தையும் அவர் தவிர்த்துவிட்டார். இதையறிந்த தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், நேரடியாக அண்ணாமலையின் பனையூர் இல்லத்துக்குச் சென்று, அவருடன் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினார். அப்போது, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற தன் அதிருப்தியை அண்ணாமலை வெளிப்படையாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் அண்ணாமலை அதிருப்தி
பி.எல். சந்தோஷ், தலைமையிடம் இதை பேசிச் தீர்வு காண்பதாக உறுதியளித்த நிலையில், அதன்பின் அண்ணாமலை மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் தற்போது மீண்டும் அவர் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நேற்று மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் அண்ணாமலை பங்கேற்றிருந்தாலும், முன்னதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக அவர் கூறிய வார்த்தைகள் கவனம் ஈர்த்தன.
அண்ணாமலை பேச்சு
"நான் பாஜகவில் ஒரு சாதாரண தொண்டன் தான். இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் நான் பேச வேண்டிய நேரம் வரும்... அப்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்," என்ற அவரது பதில், பாஜக உட்கட்சி அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கூட்டணி மற்றும் முக்கிய முடிவுகளில் தன்னை யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்ற அதிருப்தி அண்ணாமலையிடையே நீடிக்கிறது என்றும், அதனைப் பற்றி அவர் விரைவில் வெளிப்படையாக பேசலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications