என்ன தான் இழுத்து விடுவாங்கணா.. கூட்டணிக்கு வாங்கணா! டிடிவியிடம் 3 மணி நேரம் பேசிய அண்ணாமலை!
சென்னை: அதிமுகவை போலவே அக்கட்சித் தலைமை வகிக்கும் கூட்டணியிலும் சிக்கல் முளைத்திருக்கிறது. எடப்பாடியால் அதிருப்தியில் இருக்கும், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறியது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து 3 மணி நேரம் பேசியிருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. அந்தப் பேச்சின் போது "நான் தான் கூட்டணியை விட்டு உங்களை வெளியேற்றினேன்" என்று வெளியில் பேசிக் கொள்வதாகவும், எனவே என்டிஏ கூட்டணிக்கு மீண்டும் தினகரன் வர வேண்டும் என அண்ணாமலை சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி விட்டன. முதன்முறையாக தமிழகத்தில் இரண்டாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக தீவிரமாக முயன்று வருகிறது. மறுபுறம் இழந்த ஆட்சியை மீட்க வேண்டும் என அதிமுக போராடி வருகிறது.
இதற்கிடையே வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஒரு பலமான கட்சியாக உருவெடுக்க பாஜக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இப்படியாக அரசியல் சூழல் இருக்க அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது.

பாஜக அதிமுக கூட்டணி
அதிமுகவில் எடப்பாடி அதிருப்தித் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூட்டணியிலும் பிரச்சனை வெடித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை காரணம் காட்டி பாஜக தங்களைப் புறக்கணிப்பதாக கூறி டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். நயினார் நாகேந்திரனின் பேச்சும் டிடிவி தினகரனின் பேச்சும் இரு தரப்பிடையே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது.
அண்ணாமலை
இதற்கிடையே டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் பாஜக இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை நேற்று டிடிவி தினகரனின் வீட்டுக்கு சென்றார். மாலை 6 மணிக்கு சென்ற அவர் இரவு 9 மணி வரை அவருடன் அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக என்டிஏ கூட்டணிக்கு மீண்டும் டிடிவி தினகரன் வரவேண்டும் என அழுத்தமாக சொன்னாராம் அண்ணாமலை.
டிடிவி தினகரன்
தற்போதைய சூழலில், "தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதால், நான் தான் உங்களை கூட்டணியில் இருந்து வெளியே வரச் சொன்னேன் என பேசிக்கொள்கிறார்கள். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும்" என அண்ணாமலை டிடிவி தினகரனிடம் வலியுறுத்தியதோடு, எடப்பாடி பழனிசாமி குறித்து பொதுவெளிகளில் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் கூட்டணி அமைந்த பிறகு வேண்டுமானால் எடப்பாடி குறித்து பேசாமல் இருப்பேன், ஆனால் என்னை குறித்து பேசினால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றாராம் டிடிவி. மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது, எனது கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எடப்பாடிக்கு எதிராக ஒன்று திரண்டவர்கள். அவர்களுக்காக நான் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறேன். ஒருபோதும் எடப்பாடிக்காக சமரசம் செய்துகொள்ள முடியாது என அண்ணாமலையிடம் டிடிவி தினகரன் கூறியதாக சொல்லப்படுகிறது.
அமித் ஷா
தொடர்ந்து "டெல்லியில் அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்குப் பிறகு எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்" தற்போதைக்கு அமைதியாக இருப்பது அனைவருக்கும் நல்லது. திமுக ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்" என அண்ணாமலை கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அனைத்தையும் பொறுமையாக கேட்ட டிடிவி தினகரன் விரைவில் நல்ல செய்தியை சொல்லி அனுப்புவதாக அண்ணாமலையிடம் கூறியதாக கூறுகின்றனர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications