விஜய் களத்திற்கு வந்தபின்.. அடுத்த 6 மாத தமிழக அரசியல் மொத்தமாக மாறும்.. அண்ணாமலை பேட்டி
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அக்கட்சியினர் தான் விவாதிக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் அடுத்த 6 மாத காலத்தில் அரசியலில் பல மாற்றங்கள் வரும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த 10 நாட்களில் பிரிந்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். செங்கோட்டையனின் கருத்து அதிமுகவில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது.

செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக இன்று எந்த கருத்தும் சொன்னாலும் சரியாக இருக்காது. அதிமுகவை பொறுத்தவரை அந்தக் கட்சிக்கான தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதில் செங்கோட்டையனின் கருத்து தொடர்பாக அந்தக் கட்சியினர் விவாதிக்க வேண்டிய விஷயம். அதனால் பாஜகவின் தொண்டனாக இருந்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. செங்கோட்டையன் பேசியதை நானும் பார்த்தேன். இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து கூறி இருக்கிறார். நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை.
அதேபோல் திருமாவளவனுக்கு அதிமுக மீது ஏன் அக்கறை? அவர் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அந்த கூட்டணி வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக எப்படி இருந்தால், அவருக்கு என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர் பேட்டி கொடுத்துள்ளார். வெளியில் இருந்து இவர்கள் ஏன் பதறுகிறார்கள்? தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெல்லாது.
என்டிஏ கூட்டணி வலிமையாக உள்ளது. இன்னும் 7, 8 மாதங்கள் தேர்தலுக்கு உள்ளது. நடக்கும் போது எல்லாம் நன்றாகதான் நடக்கும். எல்லாம் சுமூகமாக போகும் என்று நம்புகிறேன். அதேபோல் அரசியலை பொறுத்தவரை பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்பதால், கட்சியில் மறந்துவிட்டார்கள் என்று பொருள் கிடையாது. அலிஷா அப்துல்லா ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பொறுமை காக்க வேண்டும்.
அதேபோல் என்டிஏ கூட்டணி வலிமை அடையும். பாமக இன்னும் வலிமை பெறுவார்கள். விஜய் போன்ற புதிய தலைவர்கள் களத்திற்கு வந்துள்ளார்கள். அவரும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை அடுத்த 6 மாதம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். புதிய விஷயங்களை மக்கள் பார்ப்பார்கள். விஜய் களத்திற்கு வந்தபின் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications