வருங்கால பாரத பிரதமர் வேட்பாளர் தலைவா நீங்க- அண்ணாமலைக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் திருச்சி சூர்யா
சென்னை: இந்தியாவின் வருங்கால பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாராட்டியுள்ளார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா.
திமுகவின் ராஜ்யசபா எம்பியான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா. அப்பாவின் செல்வாக்கால் திமுகவில் பிற வாரிசுகளைப் போல ஜொலிக்கலாம் என திருச்சி சூர்யா போட்ட கனவு நிறைவேறவில்லை.. அதனால் திமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு போனார்.
பாஜகவிலிருந்தே விலகுகிறேன்.. திருச்சி சூர்யா திடீர் அறிவிப்பு!

அண்ணாமலை கோஷ்டி
திருச்சி சிவாவின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக பாஜகவும் அவருக்கு முக்கியத்துவம் தந்தது. தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவராகவும் திருச்சி சூர்யாவை நியமித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜகவில் பல கோஷ்டிகள் வலம் வரும் நிலையில் அண்ணாமலை கோஷ்டியில் அதிதீவிர ஆதரவாளராக உருவெடுத்திருந்தார் திருச்சி சூர்யா.

ஆபாச பேச்சு சர்ச்சை
இன்னொரு பக்கம், திருச்சி சூர்யா மீது பல்வேறு சர்ச்சை புகார்கள் வெடித்தன; பேருந்தை கடத்திச் சென்றதாக ஒரு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அண்மையில் சக பாஜக நிர்வாகி டெய்சி சரணை செல்போனில் ஆபாசமாக பேசி பெரும் பஞ்சாயத்தை இழுத்துவிட்டார் திருச்சி சூர்யா. ஆனால் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் மீது உடனே நடவடிக்கை பாயவில்லை. அதற்கு பதிலாக, சூர்யா மீது நடவடிக்கை எடுக்க காயத்ரி ரகுராம், 6 மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

சூர்யா மீது நடவடிக்கை
பின்னர் திருச்சி சூர்யாவின் செல்போன் உரையாடல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், தமது பேச்சுக்கு சூர்யா மன்னிப்பு கேட்டார். ஆனாலும் திருச்சி சூர்யாவின் செயலை ஏற்க முடியாது என கூறி அவரிடம் இருந்து ஓபிசி தலைவர் பதவியை 6 மாத காலத்துக்கு பறிப்பதாக அண்ணாமலை அறிவித்தார். அப்போது அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திருச்சி சூர்யா கட்சிப் பணியை தொடரலாம் எனவும் கூறியிருந்தது சர்ச்சையானது.

பாஜகவில் இருந்து விலகல்
இப்போது திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதலில் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார் திருச்சி சூர்யா. பின்னர் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் திருச்சி சூர்யா. அதில் அண்ணாமலையை ரொம்பவே ஓவராகவே புகழ்ந்து தள்ளியிருக்கிரார் சூர்யா.

பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை
இந்த பாராட்டு மழையின் உச்சமாக, வருங்கால பாரத பிரதமர் வேட்பாளராகும் தகுதி படைத்தவர் அண்ணாமலை என குறிப்பிட்டுள்ளார் சூர்யா. மேலும் எல்.முருகனும் கேசவ விநாயகமும் தமது விலகலால் இனி மகிழ்ச்சி அடைவார்கள். இப்போதாவது கட்சி தொண்டர்களை நம்ப முயற்சிக்க வேண்டும் என்றும் திரியை கொளுத்தி இருக்கிறார் சூர்யா. அதேபோல், நீங்க இரண்டு பேரும் (எல். முருகன், கேசவ விநாயகம்) தலையீடு இல்லாமல் இருந்தால் தலைவர் (அண்ணாமலை) சாதிப்பார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜக வெல்ல வேண்டுமானால் தலைவர்( அண்ணாமலை) வழியில் தலையிடாமல் இருங்கள் எனவும் முருகனுக்கும் கேசவ விநாயகத்துக்கும் திருச்சி சூர்யா வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். அந்த கடிதத்தின் இறுதியில் 'அண்ணாமலையார்' துணை என முடித்துள்ளார் திருச்சி சூர்யா.