அண்ணாமலை ராஜினாமா பேச்சு டிரெய்லர்தான்- பாஜகவுக்கு குட்பை? அடுத்து தனிக் கட்சி ப்ளானா?
பாஜகவை விட்டு விலகினால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கதான் வாய்ப்பு என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான செய்திகள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அவரது இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மிக குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட கட்சிகளில் பாஜகவும் ஒன்று. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தமிழ்நாடு பாஜகவின் செயல்கள் கவனத்துக்குள்ளாகின்றன. தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாஜக கவுரவமாக இருப்பதற்கு அதிமுகவின் கூட்டணி தவிர்க்க இயலாததாகும். ஆனால் அதிமுகவுக்கோ பாஜகவுடனான கூட்டணி என்பது தவிர்க்க முடியாத சுமைதான். பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்பது நீண்டகால ஆதங்கம். ஆகையால் பாஜகவை விட்டு விலகுவதையே அதிமுக விரும்புகிறது. அதேநேரத்தில் அதிமுக தலைவர்களுக்கான நெருக்கடியால் பாஜக கூட்டணியில் நீடித்தாக வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர்களாக டெல்லி மேலிடத்தால் நியமிக்கப்படுகிறவர்கள் பொதுவாக பெரும் சர்ச்சைகளில் சிக்குவதில்லை. டெல்லி மேலிடம் என்ன அசைன்மெண்ட் கொடுக்கிறதோ அதை கனகச்சிதமாக செய்து முடிப்பார்கள். டெல்லி பாஜக மேலிடத்தின் அரசியல் எதிர்பார்ப்புகளை தமது ஆக்கப்பூர்வமான பணிகளால் நிறைவு செய்தவர்கள் அதற்கான பிரதிபலன்களை பெறுவதும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் சீனியர்களாக இருந்த இல.கணேசன், சிபிஆர் உள்ளிட்டோர் ஜூனியரான தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலைப்படுத்தப்பட்டபோதும் ஆளுநராக்கப்பட்ட போதும் அமைதி காத்தனர்; கட்சிக்கு புதுவரவாக இருந்த எல்.முருகன் தலைவராக்கப்பட்ட போதும் மத்திய அமைச்சராக்கப்பட்ட போதும் அமைதி காத்தனர். இப்போது இல.கணேசன், சிபிஆர் ஆளுநர்களாக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது உள்ள அண்ணாமலை ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது மட்டுமல்ல.. அப்படியான விமர்சனங்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளில் பேசப்படுகிறார். அதனைவிட பாஜகவின் உட்கட்சி மோதல்கள் இதுவரை இப்படியான அளவுக்கு வெளிப்படையாக வீதிக்கு வந்ததும் இல்லை. தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் போக முடியாத பாஜக நிர்வாகிகள், வேறுவழியே இல்லாமல் கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதிமுகவுக்கு போவது தொடர் கதையாகி வருகிறது.
தமது தலைமைக்கு எதிராக கலகம் எழுப்பிவிட்டு தமது கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு அதிருப்தியாளர்கள் அணி அணியாக போவதை அண்ணாமலையால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இயல்பாக அதிமுகவை எதிர்க்கும் நிலையில் இருக்கிறார் அண்ணாமலை. இதன் உச்சமாகத்தான், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்.
எந்த ஒரு மாநிலத்திலும் எந்த கட்சியுடன் எப்படியான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை மாநில பாஜக பிரிவுகளுக்கு டெல்லி மேலிடம்தான் கட்டளையிடும். அந்த கட்டளையை செயல்படுத்த அல்லது ஏற்க முடியாதவர்கள் அதிகபட்சம் பாஜகவில் இருந்து வெளியேறி எதிர்க் கட்சியில் ஐக்கியமாவதுதான் வழக்கம். தமிழ்நாட்டில் அண்ணாமலையைப் பொறுத்தவரை அதிமுகவை வேண்டா பொருளாக பார்க்கிறார்; டெல்லி மேலிடமும் தமிழ்நாட்டு பாஜக மூத்த தலைவர்களும் அதிமுகவை சுவாசக் கருவியாக கையாள்கின்றனர். இதனால் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலையால் நீடிக்க முடியாத நிலை. டெல்லி மேலிடமும் இடைவிடாத சர்ச்சைகளால், கட்சி கட்டமைப்பையே காலி செய்யக் கூடிய அளவிலான சர்ச்சைகளால் அண்ணாமலையை கைவிடவும் தயங்காத நிலை எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போதைய நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி தவிர்க்க முடியாதது; அதிமுக- பாஜக கூட்டணி தொடரவே செய்யும். அதனால் அண்ணாமலை பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதும் யதார்த்தமானதாகிவிடும். அண்ணாமலை சொல்வதைப் போல அவர் பாஜகவில் தொண்டராகவே மட்டும் நீடிப்பாரா? என்பது சந்தேகம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். அண்ணாமலையால் வேறு ஒரு கட்சிக்குப் போக முடியாது; எந்த ஒரு கட்சியும் அண்ணாமலையை ஏற்கவும் செய்யாது; ஆகையால் பாஜகவின் தொண்டராக நீடிப்பேன் என அண்ணாமலை சொல்வதற்கு அப்பால், அவர் அரசியலில் நீடிக்க ஒரே ஒரு வாய்ப்பு, தனிக்கட்சி தொடங்குவதாகத்தான் இருக்கும். இதன் சாத்தியங்கங்கள் எப்படியானது என்பது சொல்லவும் முடியாத ஒன்று என்பதும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications