“பொய்யை எழுதி கொடுத்திருக்கிறார்கள்.. ஆளுநர் வெளியேறியதற்கு அப்பாவுதான் காரணம்!” அண்ணாமலை விமர்சனம்
சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையின் தொடக்கத்தை மட்டும் வாசித்து விட்டு மற்றவற்றை தவிர்த்திருந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்ட அரங்கில் தொடங்கியது. அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவைத்தலைவர் மு.அப்பாவு, பேரவை செயலர் கி.சீனிவாசன் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், சென்னை காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டப்பேரவை தலைவர், முதலமைச்சர், அவை உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு ஆளுநர் ரவி தமிழில் வணக்கம் கூறிவிட்டு உரையை வாசிக்க தொடங்கினார்.
அதில், "2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் உரையை நிகழ்த்துவதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இப்புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு உரையை தொடங்க விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
பின்னர் திருக்குறளை கூறிவிட்டு உரையை முழுவதுமாக படிக்காமல் அமர்ந்துவிட்டார். ஏற்கெனவே கடந்த முறை திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்திருந்தார். இப்படி இருக்கையில் இந்த முறை முழு உரையையும் அப்படியே புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். இறுதியாக "எவ்வளவோ பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் "PM care fund"-ல் உள்ளது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாமே. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஆளுநர் ரவி அவையிலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில், சபாநாயகர் தவறாக பேசியதால்தான் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதாவது, "ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட உரையில் உப்பு, மிளகாய், காரம், வெங்காயம் இல்லாமல் இருக்கிறது. வெறும் தண்ணீரை கொடுத்துவிட்டு சாம்பார் என்று சொல்வதை போல இருக்கிறது. பொய்யை எழுதி முதலமைச்சரை பாராட்ட வேண்டும் என்றால் ஆளுநர் எப்படி பாராட்டுவார்?
ஆளுநர் பேசியது சரியோ, தவறோ அதை உறுப்பினர்கள் சொல்லட்டும். அவையில் ஆளுநரை வைத்துக்கொண்டே அவரை பற்றி தவறாக பேசியிருப்பதை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகரின் நடவடிக்கைகளை பார்த்தால் அவர் குடும்பத்தில் யாருக்கேனும் தேர்தலில் சீட்டை எதிர்பார்ப்பார் என்பதை போலத்தான் இருக்கிறது. நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர், ஆளுநரை தவறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications