தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகம்.. “அமைச்சர் மழுப்பல் பேச்சு”.. அண்ணாமலை காட்டம்!
சென்னை : தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகளை நீண்ட காலமாக வழங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 17 உறுப்பு கல்லூரிகளில் சுமார் 1500 இடங்கள் தமிழ் வழியில் படிப்பவர்களுக்காக இருந்து வந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழங்களின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக 11 கல்லூரிகளில் தற்காலிகமாக தமிழ் பிரிவுகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இதுபோன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது.
தமிழ் மொழிப் பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு மாணவர் கூட தமிழ் வழிக் கல்வி பொறியியல் பிரிவில் சேரவில்லை என்ற மழுப்பலான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் செய்யத் தவறியது திமுக அரசின் குற்றம். செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications