சிபிஆர் ராஜினாமாவால் ஒரு துளி கண்ணீர்.. எச்.ராஜா என்கிட்ட கிண்டலா கேட்டார்.. அண்ணாமலை சொன்ன விஷயம்!
அண்ணாமலையிடம் எச்.ராஜா கிண்டலாகப் பேசியதை பாஜக தலைவர்கள் ரசித்துச் சிரித்தனர்.
சென்னை : ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவின்போது, மேடையில் அமர்ந்த எச்.ராஜா, கிண்டலாக சொன்ன விஷயத்தை தனது பேச்சில் குறிப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை.
முன்னதாக, ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு வசதியாக கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் அளித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து பாராட்டு விழா மேடையில் அமர்ந்திருந்தபோது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலையிடம் கிண்டலாக கூறினார். நான் ஒவ்வொருத்தரா பாஜகவில் உறுப்பினராகச் சேர்க்க, நீங்க எல்லோரையும் ராஜினாமா பண்ண வைக்கிறீங்களே எனக் கிண்டல் செய்தார். இதைக் கேட்டு மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் வெடித்துச் சிரித்தனர்.

பாராட்டு விழா
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக வரும் பிப்ரவரி 18ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எச்.ராஜா கிண்டல்
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, "சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கியது எச்.ராஜாதான். தைரியமாக தனக்குத் தோன்றுவதை எப்போதும் பேசுபவர் எச்.ராஜா. நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து கட்சியில் சேர்த்தால் நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்ய வைக்கிறீர்களா என எச்.ராஜா என்னிடம் கிண்டலாக கேட்டார். இல.கணேசன் கண்ணீர் சிந்த ராஜினாமாவை வழங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றார். இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் என இரு முக்கிய தலைவர்களின் ராஜினாமாவை நான் தலைவராக இருந்து பெற்றுக் கொண்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

சமாதானமாகவில்லை
மேலும் பேசிய அண்ணாமலை, "கோவை குண்டுவெடிப்பு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்டது. அத்வானியின் விமானம் தாமதமாக வந்தது. சி.பி.ராதாகிருஷ்ணன் அமர்ந்திருந்த மேடை அருகிலும் குண்டு வெடித்தது. நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் பேசிய தொண்டர் ஒருவர் கோவை குண்டுவெடிப்பில் இறந்த 58 ஆத்மாக்கள் இன்னும் சமாதானமாகவில்லை. எனவேதான் அதில் பாதிக்கப்பட்டவர்களை நல்ல பொறுப்புக்கு கொண்டு செல்கிறது என்றார்.

மற்ற மாநிலங்களுக்கு கிடைக்காத பெருமை
கடந்த ஒரு மணி நேரம் முன்பு, கட்சியின் தொண்டன் எனும் அந்தஸ்தை சி.பி.ராதாகிருஷ்ணனிடமிருந்து பாஜக எடுத்துக் கொண்டுள்ளது. அதில் எங்களுக்கு சிறிய வருத்தம் உண்டு. கண்ணில் ஒரு துளி கண்ணீர் இருக்கவே செய்கிறது. மாவோயிஸ்ட் தாக்குதல்கள், நிலக்கரி ஊழல் நடந்த மாநிலம் ஜார்க்கண்ட். அந்த மாநிலத்தில் ஆளுநராக வருவதற்கு பொருத்தமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன். தற்போது பதவியில் இருக்கும் மூன்று ஆளுநர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பாஜகவில் பல எம்.பிக்களை வைத்துள்ள மற்ற மாநிலங்களுக்கு கூட இந்தப் பெருமை கிடைக்கவில்லை.

குறைந்த வயதில்
கட்சிக்காக விசாவாசமாக உழைக்கும், தலைமைப் பண்பு இருப்பவர்களை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது குறித்து கட்சி தொடர்ந்து சிந்திக்கும். தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோரைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராகியுள்ளார். குறைந்த வயதில் ஆளுநராகியுள்ளார் சி்பி.ராதாகிருஷ்ணன். கட்சியில் எடுத்ததைப் போல் 100-க்கு 100 மதிப்பெண்ணை ஆளுநர் பதவியிலும் எடுப்பார் சி.பி.ராதாகிருஷ்ணன். இன்று நான் இருக்கையில் அமரச் சொன்னபோதும் அண்ணன் சி.பி.ஆர் அமரவில்லை. என் பேச்சை இன்றாவது கேள் என்று கூறினார்" என உருக்கமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications