பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருப்பவர் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அவர் தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸுக்குள் வந்துள்ளார். வழக்கமாக மாநில அரசை மட்டுமே விமர்சிக்கும் அவர், தற்போது சிபிஎஸ்சி விவகாரத்தில் மோடி அரசையே விமர்சித்தது பேசுபொருளானது. அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்றாவது மொழி கட்டாயம் என்ற முயற்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்தது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே "இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தின் நிலைபாடு" என்று அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
மும்மொழிக் கொள்கை
ஆரம்பத்தில் 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்சி அறிவித்திருந்தது. ஆனால், திடீரென இந்த கல்வியாண்டிலிருந்தே அந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தான் தற்போது அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். "முன்னதாக வெளியிட்ட அறிவிப்பை சிபிஎஸ்சி மீறியுள்ளது. இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முன்பு அறிவித்தபடி 2029-30 முதல் மட்டுமே அமல்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலையின் இந்த அறிக்கை தான் தற்போது அரசியல் களத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. காரணம், அவர் சாதாரண பாஜக நிர்வாகி அல்ல. கடந்த சில ஆண்டுகளில் தமிழக பாஜக வளர்ச்சிக்கு முகமாக இருந்தவர். திமுக அரசை நேரடியாக எதிர்த்து அரசியல் பேசியவர். இளைஞர்கள் மத்தியில் தனி ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருந்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக கூட்டணியை காப்பாற்றும் முயற்சியில், பாஜக மேலிடம் அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றியது.
பாஜக
அதன்பிறகு அண்ணாமலை அரசியல் ரீதியாக சற்றே அமைதியாகவே இருந்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு முக்கிய பங்கு தரப்படவில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்களிடையே இருந்து வந்தது. அதே நேரத்தில், தேர்தல் தோல்விக்குப் பிறகு "அண்ணாமலையை ஓரங்கட்டியது தான் பாஜகவின் மிகப்பெரிய தவறு" என்ற கருத்தும் கட்சிக்குள் எழ ஆரம்பித்தது.
குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் அண்ணாமலைக்கு இருந்த ஆதரவை கட்சி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த சூழலில் தான் தற்போது அவர் மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது முக்கிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இது வெறும் மாணவர்கள் நலன் சார்ந்த கருத்தா? அல்லது டெல்லி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நகர்வா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
மேலும், அண்ணாமலை விரைவில் பாஜகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. தவெக தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், இளைஞர் ஆதரவு கொண்ட தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையும், விஜயும் நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அரசியல் களத்தில் இந்த பேச்சு வேகமாக பரவி வருகிறது.
டெல்லிக்கு அழுத்தம்
"ஒன்று மத்திய அமைச்சரவையில் இடம் தர வேண்டும், அல்லது மீண்டும் மாநிலத் தலைமை பொறுப்பை வழங்க வேண்டும்" என்ற அழுத்தத்தை டெல்லிக்கு கொடுக்க அண்ணாமலை ஆதரவாளர்கள் தவெக என்ற ஆயுதத்தை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேநேரம், அண்ணாமலை போன்ற ஒருவர் பாஜகவிலிருந்து விலகுவது அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக என்ற பெயரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்ற முக்கிய முகம் அண்ணாமலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications