அரவக்குறிச்சியா அல்லது காங்கேயமா? தொகுதி மாறுகிறாரா அண்ணாமலை.. பாஜக முடிவு என்ன?
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி பாஜக தலைமை மூலமாக காங்கேயம் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட இளங்கோ 93,336 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அண்ணாமலை 68,553 வாக்குகளை பெற்று 2வது இடம் பிடித்தார்.

அண்ணாமலையின் தோல்விக்கு பள்ளப்பட்டி நகராட்சியே காரணமாக அமைந்தது. ஏனென்றால் பள்ளப்பட்டி நகராட்சியில் மட்டும் சுமார் 31 ஆயிரம் இஸ்லாமியர்களின் வாக்குகள் இருந்தன. இதில் பள்ளப்பட்டி நகராட்சி பதிவான வாக்குகளில் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு சென்றது. சில வார்டுகளில் அண்ணாமலை வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார்.
இது அண்ணாமலைக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் SIR பணிகள் காரணமாக பள்ளப்பட்டி நகராட்சியில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வரை குறைந்துள்ளது. இதனால் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் கடந்த தேர்தலின் போது செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். பல்லை உடைத்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை எகிறியதால், பள்ளப்பட்டி பகுதி மக்கள் கொந்தளித்தனர். இதனால் அண்ணாமலையால் அப்பகுதியில் பிரச்சாரத்திற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அண்ணாமலை தற்போது இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடைந்திருப்பதால் பாஜகவினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இம்முறை அண்ணாமலை தரப்பு அரவக்குறிச்சி தொகுதி வேண்டாம் என்றும், காங்கேயம் தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆலோசித்து பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியில் பெயர் சொல்லும்படியான இஸ்லாமிய கட்சிகள் இணைவது சாத்தியமில்லை என்று பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ, தற்போது திமுக பக்கம் நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி அல்லாமல் அண்ணாமலை வேறு தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications