“சனாதன” தர்ம பயணம் ஆரம்பம்.. தமிழ்நாட்டுக்கு வருகிறார் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்!
சென்னை: ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று (பிப்ரவரி 12) முதல் சனாதன தர்ம யாத்திரை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண் நான்கு நாட்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல்வேறு கோயில்களில் வழிபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சனாதன தர்ம சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நான்கு நாட்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு கோயில்களை பார்வையிடுவார். இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தனது சனாதன தர்ம பயணத்தை தொடங்குகிறார் பவன் கல்யாண்.

அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீ பரசுராம சுவாமி கோயில், அகஸ்திய ஜீவ சமாதி, கும்பேஸ்வரர் கோயில், சுவாமிமலை மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்கிறார் பவன் கல்யாண்.
சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை பவன் கல்யாண் முன்னர் கண்டித்திருந்தார், இது தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் பிரச்சனையாக மாறியது. இப்போது, பவன் கல்யாண் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வர இருப்பதால், அவரது சுற்றுப்பயணம் அரசியல் ரீதியாக விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் பேசிய பவன் கல்யாண், "சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி.. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது." எனப் பேசி இருந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை'' என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேசுக்கு நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சனாதனம் குறித்த இந்த கருத்து தொடர்பாகவே உதயநிதியை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடியிருந்தார் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்.
இதற்கிடையே, ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு, திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்தியதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாள், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை இருப்பதாக ஆய்வக அறிக்கை ஒன்று வெளியானது.
திருப்பதி லட்டு சர்ச்சை நாட்டையே அதிர வைத்த நிலையில், ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தார். திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட இந்த தீட்டை சரி செய்யும் விதமாக திருப்பதி கோவிலை சுத்தம் செய்தார். மேலும், பரிகார தீட்சையாக 11 நாள் விரதம் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லப்போவதாக அறிவித்தார் பவன் கல்யாண். சொன்னபடி, 11 நாள் விரதம் இருந்த பவன் கல்யாண், தனது விரதத்தை நிறைவு செய்து, காவி உடையுடன் திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்றார்.












Click it and Unblock the Notifications