நிதி உதவி என்ன.. அரசியல் ரீதியாவே உதவுறோம்! மோடிகிட்ட பேசுங்க! ஸ்டாலினிடம் சொன்ன ராஜ்நாத்.. ட்விஸ்ட்
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பில் மழை, வெள்ளம் தாண்டி சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். மழை வெள்ளம் குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மத்திய அரசிடம் மாநில அரசி எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஸ்டாலின் விவரித்ததை கேட்டுக்கொண்டார் ராஜ்நாத் சிங். மத்திய அரசு நிதி உதவி அளிப்பது குறித்து ராஜ்நாத்சிங் உறுதி தந்தார்.

இந்த தகவல்கள் எல்லாம் வெளிப்படையானது. அதனை ராஜ்நாத்சிங்கே தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தாண்டி சில விசயங்கள் இந்த சந்திப்பில் நடந்திருக்கிறது. மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்த ஆலோசனை முடிந்ததும், நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருக்கிறது.
வெள்ள பாதிப்பு: அதனால், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு கோரிக்கை வைக்கும் முழுத் தொகையையும் ரிலீஸ் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு , நிலைமை எனக்கு புரிகிறது. மத்திய குழுவினரை அனுப்பி வைக்கிறோம். அவர்களின் பரிந்துரைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக மக்களை கைவிட மாட்டோம் என்று சொல்லியுள்ள ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமரிடம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம் ; பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார். இதன் அர்த்தம், நிதி உதவி மட்டுமல்ல ; அரசியல் ரீதியாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற தொணி அதில் இருந்தது என்கிறார்கள் விபரமறிந்த கோட்டை அதிகாரிகள் தரப்பினர்.
மத்திய அரசு நிதி: இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
ஆலோசனை: தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (7.12.2023) சென்னைக்கு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சருடன், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வருகை தந்தனர்.
பின்னர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர். வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications