வீர தீர சாகச செயல்..கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. துணிச்சலான வீர சாகச செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பயணம் செய்து பூமிக்குத் திரும்பும்போது அகால மரணமடைந்த இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டு தோறும் தமிழக அரசு வீரச் செயலுக்கான விருதினை வழங்கி வருகிறது. அந்த விருது பெற தற்போது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது' ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.
2022-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 அவர்களுக்கு அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாக 30.06.2022-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.












Click it and Unblock the Notifications