அரக்கோணம் பலாத்காரம்: ஆளுநர் மாளிகை வந்த பாதிக்கப்பட்ட பெண்! அப்படியே ஆட்டோவில் ஏற்றிய அதிகாரிகள்
சென்னை: அரக்கோணம் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது புகார் அளிக்கவும், விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் கோரிக்கை வைத்து ராஜ் பவன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அனுமதியின்றி ராஜ் பவன் வந்ததால், அவரிடம் இருந்த மனுவை புகைப்படம் எடுத்து கொண்ட போலீசார், அவரை ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது திருமண மோசடி மற்றும் அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சித்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் உலுக்கி இருக்கிறது. டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

திருமண மோசடி
பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறுகையில், என் பெற்றோரை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி, என்னை திருமணம் செய்து துன்புறுத்தினார். அவரால் என் மனம், உடல் மட்டுமல்லாமல் படிப்பும் நாசமாய் போய்விட்டது. என்னைப் போல் மேலும் 15 பெண்களை ஏமாற்றி அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் நீதி பெற்று கொடுக்க வேண்டும் என்றார்.
வீடியோ வெளியிட்ட பெண்
தொடர்ந்து காவல்துறை தரப்பில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சுமார் மூன்றரை மணி நேரம் விசாரிக்கப்பட்டது. இதன்பின் வீடியோ ஒன்றை வெளியிட்ட அந்த பெண், காவல்துறையினர் என்னிடம் எடுத்த ஸ்டேட்மெண்டில் உடன்பாடு இல்லை. ஏதோ நான் குற்றம் செய்ததை போல் கேள்விகளை கேட்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை என்னிடம் கேட்கிறார்கள்.
எஃப்ஐஆர் பதிவு?
தெய்வச்செயலின் செல்ஃபோனை வாங்கி விசாரணை நடத்தினால், நிச்சயம் கிடைக்கப் போகிறது. என் தரப்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு இன்னும் ஒரு சிஎஸ்ஆர் காப்பி கூட கொடுக்கவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்வோம் என்று உறுதி அளித்து அனுப்பினார்கள். ஆனால் இதுவரை எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தேசிய மகளிர் ஆணையம்
இதனைத் தொடர்ந்து திமுக பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, அரக்கோணம் பாலியல் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ளதாக அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக காவல்துறையிடமும் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
ராஜ்பவன் வந்த பெண்
இதனிடையே நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தெய்வச்செயல் மற்றும் அவரின் முதல் மனைவி இருவருக்கும் முன் ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், சென்னையில் உள்ள ராஜ் பவனில் ஆளுநரிடம் புகாரளிக்க முயற்சித்துள்ளார். புகார் மனுவுடன் தெய்வச்செயல் குறித்து முறையிடுவதற்காக ராஜ்பவனில் காத்திருந்தார்.
சிபிஐ-க்கு மாற்றுங்கள்
ஆனால் உரிய அனுமதியின்றி ராஜ் பவன் வந்ததால், புகார் மனுவை மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறையிடம் நான் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் ராகுல் என்ற பெயரிலான ஐடியில் இருந்து வெளியிட்டு அவமானப்படுத்திவிட்டார்கள். வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications