"நிறம்" மாறும் அதிமுக?.. மேலிடத்துக்கு "மெசேஜ்" தந்த தலைகள்.. விழிக்கும் கமலாலயம்.. விரைவில் சுபம்?
எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் இருவரையும் இணைக்க பாஜக மேலிடம் முயல்கிறதா
சென்னை: அதிமுகவுக்குள் பூசல்கள் வெடித்து வரும் நிலையில், இது தொடர்பாக பாஜகவுக்கான நிலைப்பாடு என்ன? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது..!
Recommended Video
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், தொண்டர்கள் நொந்து போய் உள்ளனர்.. தலைவர்கள் ஒன்றுசேர்ந்து கட்சியை காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கம் அவர்களிடம் வெடித்துள்ளது.
இப்போதைக்கு கட்சி எடப்பாடி பழனிசாமி வசம் வந்துள்ளது.. ஆனாலும், ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டால் என்னாவது? இலை முடக்கப்பட்டு விட்டால் என்னாவது? என்ற சிக்கல்களை எடப்பாடி தரப்பு அறியாமல் இல்லை.

எடப்பாடி செக்
மற்றொருபுறம், எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரி சோதனைகள், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ கோரிய அனுமதி உள்ளிட்டவைகள் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியையும் ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது.. ஒவ்வொரு முறை டெல்லிக்கு எடப்பாடி செல்லும்போதும் சரி, அல்லது டெல்லி தலைவர்கள் சென்னை வந்தாலும் சரி, எடப்பாடியிடம், அவர்கள் வைக்கும் கோரிக்கை, சசிகலா, தினகரனை கட்சிக்குள் அழைத்து கொள்வது பற்றிதான்.

யூடர்ன்
ஆனால், இந்த கோரிக்கையை எடப்பாடி கடைசிவரை ஏற்கவில்லை.. சசிகலாவையே அரவணைத்து செல்லுங்கள் என்று அட்வைஸ் தந்த மேலிடம், ஓபிஎஸ்ஸை சொல்லாமல் இருக்காது.. எப்படியும், 2 பேரையும் ஒன்றுசேர்க்க தலைவர்கள் யோசித்து வருகிறார்கள் என்பது அறிந்ததுமே யூடர்ன் போட்டு, டெல்லியில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.. எனினும், பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் - எடப்பாடியை நிச்சயம் சேர்த்து வைப்பார்கள் என்றும், எந்த காரணத்தை கொண்டும், அதிமுகவின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல், தங்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

சாயும் பாஜக
இதனிடையே, அகில இந்திய பாஜக செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவியும், இவர்கள் இணைப்பை விரும்புவதாகவே கூறினார்.. அந்த கட்சியை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் தங்கள் நட்பு தொடரும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கூறியிருந்தார்.. இப்போது பாஜகவை பொறுத்தவரை, எடப்பாடி மீது அதிக கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.. 90 சதவீதம் கட்சியை தன்னிடம் வைத்திருக்கும் எடப்பாடியை முழுமையாக பகைத்து கொள்ளவும் விரும்பவில்லை..

செல்லூர் ராஜு
ஒருபக்கம் வழக்கு, விசாரணை என மிரட்டல்கள் அவ்வப்போது வெளியிட்டாலும், எடப்பாடி டீம் அசைந்து கொடுப்பது போலவும் தெரியவில்லை. நேற்றைய தினம் இது அப்பட்டமாகவே வெளிப்பட்டது.. தமிழகம் முழுவதும் திமுகவின் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.. அப்போது, எடப்பாடியின் ஆதரவாளரான செல்லூர் ராஜு பேசிய பேச்சு, மிகுந்த முக்கியத்துவம் பெற்றும் வருகிறது.. அவர் பேசும்போது, "திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்... திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் என்று சொல்பவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்" என்று கூறியதை தமிழக பாஜக கவனிக்காமல் இல்லை.

கமலாலயம் ஷாக்
அதேபோல, எஸ்பி வேலுமணி சொல்லும்போது, "அதிமுக கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.. இதை மாநில தலைவர் அண்ணாமலையே தெளிவாக சொல்லிவிட்டார்.. அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.. பாஜகவினர் அவர்கள் கட்சியை பார்த்து கொள்வார்கள். யாரின் ஆலோசனையை கேட்டும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை" என காட்டமாக வேலுமணி கூறியதையும் கமலாலயம் கவனிக்காமல் இல்லை.

சமாதானம்
ஓபிஎஸ் - எடப்பாடி இருவரையும் பாஜக மேலிட தலைவர்கள் சமாதானம் செய்வார்கள், அதுவும் நாளை மறுநாள் சென்னை வரும்போது, நிச்சயம் இதற்கான முன்னெடுப்பை எடுப்பார்கள் என்று நம்பப்பட்டு வரும்நிலையில்தான், இப்படி ஒரு ஷாக்கை எடப்பாடி டீம் தந்துள்ளது.. சுருக்கமாக சொன்னால், பாஜகவுக்கு மெசேஜ் தருவதுடன், அதன் தலையில் தட்டி வைப்பது போன்றே, நேற்றைய அதிமுக சீனியர்கள் பேச்சு இருந்ததாக தெரிகிறது.. எனினும், எம்பி தேர்தல் விரைவில் உள்ள நிலையில், அதிமுகவில் சமாதானத்தை ஏற்படுத்த பாஜக தவறாது என்கிறார்கள்..

கமலாலயம்
அதேசமயம், இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. இத்தனை பாடுபட்டு, இவ்வளவு நெருக்கடிகள், பூசல்களுக்கு மத்தியில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், இதற்கு பாஜகவில் யாருமே வாழ்த்து சொல்லவில்லை.. முதல் நபராக, டாக்டர் ராமதாஸ் ஓடோடி வந்து வாழ்த்தியபோதுகூட, கமலாலயம் கப்சிப் மோடிலேயே இருந்தது.. அதுமட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில், பிரதமர் மோடியை, அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.. அப்போது, பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமியும் இருந்தார்.

சைசாக கூறிய அண்ணாமலை
இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை, அந்த போட்டோவுடன் ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.. அதில், 'பிரதமரை சந்தித்த போது, தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் உடன் இருந்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.. அதாவது, எடப்பாடியின் கட்சி பதவியை குறிப்பிடாமல், எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே எடப்பாடி என்பதை நாசூக்காக அண்ணாமலை பதிவிட்டிருந்தார்..

டீம் எடப்பாடி
இது எடப்பாடி டீமுக்கு கடுப்பையும், ஓபிஎஸ் டீமுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.. இப்படி அதிமுகவுக்குள் ஒரு மோதல் என்றால், அதிமுக - பாஜகவுக்குள் வேறு ஒரு மோதல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்படி இருந்தாலும், நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமர், இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினால், நிலவி கொண்டிருக்கும் அனைத்துவிதமான சர்ச்சைகளும், பூசல்களும், அதிருப்திகளும், கோபங்களும், வருத்தங்களும் நொறுங்கி போகும் என்றே நம்பலாம்..












Click it and Unblock the Notifications