அரிசி விலை திடீர்ன்னு அதிகரிப்பு.. தமிழக மக்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா? இன்னும் 6 மாசமா?
சென்னை: திடீரென அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?
கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.
அதில், "தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியைக் கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குப்பம்: கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்ததொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
சந்திரபாபு நாயுடு: சந்திரபாபு நாயுடுவின் அந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, இதுகுறித்து தீவிர நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடவும், அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.. ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக 4 நாட்களுக்கு முன்புகூட செய்திகள் வந்திருந்தன.. இப்படி அரிசி கடத்தலால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
அரிசி விலை: இப்படிப்பட்ட சூழலில்தான், ரேஷன் அரிசியை தவிர்த்து, மற்ற சாப்பாட்டு அரிசிகளிலும் விலை உயர்ந்து வருவதாக பகீர் கிளம்பி உள்ளது.. அதிலும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி விலை உயர்ந்துள்ளது.. பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அரிசிகளின் விலை அதிகரித்துவிட்டது.. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருக்கிறதாம்..
இதற்கு அரிசி ஆலை ஓனர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள்.. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்திருக்கிறதாம்.. இதைத்தவிர, கர்நாடகாவில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்கிறார்கள்..
விலை உயர்வு: இதன்காரணமாக, அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கர்நாடக இலவச அரிசி அறிவிப்பு காரணமாகவே, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அளவில் தாக்கமும் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டிலும், ஒரு கிலோ அரிசி விலை 2 ரூபாய் முதல் அதிகரித்து இருக்கிறதாம்.
நெற்களஞ்சிய பகுதிகளை வரப்பிரசாதமாக பெற்றுள்ள நிலையில், இப்படி ஒரு தட்டுப்பாடா? என்ற குழப்பமும் எழுந்துள்ள நிலையில், அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. நெற்களஞ்சிய பகுதியில், விளையும் நெல் பயிரானது, பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்..
கோரிக்கை: எனவே, இப்படிப்பட்ட சூழலில், வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பிற மாநிலங்களின் உதவியும் தமிழகத்துக்கு தற்சமயம் உடனடி தேவையாக இருக்கிறது.. எப்படி பார்த்தாலும், இன்னும் 6 மாத காலத்துக்கு அதாவது அடுத்த அறுவடை காலம்வரை, இந்த அரிசி விலையில் உயர்வு இருக்கும் என்கிறார்கள்.. எனவே, இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு தலையிட்டு, உடனடி நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருநது கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.












Click it and Unblock the Notifications