திருச்செந்தூரில் நடந்த அதிசயம்.. சுனாமியில் சிக்காத முருகன் கோயில்.. இதுதான் அந்த நெகிழ்ச்சி காரணம்
சென்னை: 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது, கடலுக்கு மிக அருகில் இருந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பாதிக்கப்படாதது இன்றும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கான காரணங்கள் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சொல்லப்படுகின்றன.. அவைகளை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2004ம் ஆண்டு உலகை தாக்கிய சுனாமியை மறந்திருக்க முடியாது.. தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் அத்தனையும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின.. லட்சக்கணக்கான உயிர்கள் கடலில் மூழ்கின.

திருச்செந்தூர் முருகன் கோயில்
ஆனால், கடலையொட்டி இருக்கின்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை மட்டும் சுனாமியால் நெருங்க முடியவில்லை... எல்லா இடங்களிலும் கடல் அலை சீறிக்கொண்டு, நிலத்தை நோக்கி வந்தது.. ஆனால் திருச்செந்தூரில் மட்டும் கடல் 200 மீ தூரத்திற்கு உள்வாங்கி சென்றது.
திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கிச் சென்றதன் காரணத்தை ஆன்மீகவாதிகள் திருச்செந்தூர் திருப்புகழ் பாடலிலிருந்தே உதாரணத்துடன் விளக்குகிறார்கள்..
முருகன் கோயில் - கடல் சுனாமி
அதாவது சூரபத்மன் மலை போன்ற மாமரமாகக் கடலுக்கடியில் மறைகிறான்... அப்போது முருகப்பெருமான், கடல்நீர் பயந்து பதுங்கி ஓடும் படியாக வடிவேலை எறிந்து, மாமரமாக இருக்கும் சூரனை இரு கூராக்கி, சேவலாகவும் மயிலாகவும் மாற்றியதாகவும், முருகனுக்கு பயந்து கடல் அலைகளே பதுங்கி விட்டதாகவும் விளக்கங்களை கூறுகிறார்கள்..
அதுமட்டுமல்ல, முருகப் பெருமானுக்கு வருண பகவான் "உமது இருப்பிடத்தின் எல்லையைத் தாண்டி நான் ஒருபோதும் வரமாட்டேன்" என்ற ஒருமுறை வாக்கு தந்துவிட்டாராம்.. அதன் காரணமாகவே கடல் நீர் கோயிலுக்குள் நுழையவில்லை என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனாலேயே திருச்செந்தூர் முருகனை கடல் காத்த கந்தன் என்றும் அன்புடன் அழைத்து வருகிறார்கள்..
அறிவியல் காரணங்கள்
அதேசமயம் திருச்செந்தூர் கோயிலை சுனாமி தாக்காததற்கு சில அறிவியல் காரணங்களும் சொல்லப்படுகின்றன...
முதலாவதாக, திருச்செந்தூர் கோயில், கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், அது அமைந்துள்ள இடம் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது.
கோயிலின் முன்புறம் கடல் இருந்தாலும், அந்த பகுதியில் கடற்கரை மெதுவான சரிவுடன் உள்ளது. இதனால் சுனாமி அலைகள் அந்த இடத்தை அடையும்போது, அவற்றின் வேகம் மற்றும் உயரம் குறைந்தது. அதனால்தான் கடல்நீர் உயர்ந்து தாக்கும் தன்மை அங்கே ஏற்படவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதேபோல, திருச்செந்தூர் கடற்கரை பகுதியில், கடலின் அடிப்பகுதி திடீரென ஆழமாகவோ உயரமாகவோ மாறாமல் சமமாக உள்ளது.. பெரும்பாலும் சுனாமி அலைகள் அதிக சேதப்படுத்துவது, கடலின் அடிப்பகுதி திடீரென மாறும் இடங்களில்தான். ஆனால் திருச்செந்தூரில் அப்படியான திடீர் மாற்றம் எதுவும் இல்லை.. அதனால்தான் அலைகள் கரை வந்தபோதும் பலமாக தாக்க முடியவில்லையாம்.
மணல் மேடுகள், கடல் அலைகள்
அதேபோல, கோயிலின் முன்புறத்தில் இருந்த பாறைகள், மணல் மேடுகள் போன்ற இயற்கை தடுப்புகள், சுனாமி அலைகளின் வேகத்தையும் சக்தியையும் குறைத்துவிட்டன. இதனாலும், கடல் அலைகள் கரைக்கு வந்தபோதும், சேதம் பெரிதாக ஏற்படவில்லை.
அதாவது கோயில் அமைந்துள்ள தளம் ஒரு வலுவான பாறைப் படுகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த இயற்கையான பாறை அமைப்பு, அலையின் வேகத்தைத் தாங்கும் அரணாக செயல்பட்டது.
அதேபோல 2004 சுனாமி உருவான இடத்திலிருந்து வந்த பெரிய அலைகள், நேராக திருச்செந்தூரை நோக்கி வரவில்லை. அந்த அலைகள் அதிகமாக தாக்கிய பாதையில் திருச்செந்தூர் வராததால், நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் ஏற்பட்டது போல மிகப்பெரிய அலை தாக்கம் இங்கே ஏற்படவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications