தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்துறீங்களா? அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது.. நீதிபதிகள் பளீர்
வேட்புமனு தாக்கல் 7ம் தேதி முடிகிறது. அப்படி என்றால் 7ம் தேதிக்குள் என்ன முடிவு எடுப்பது பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க எங்களை கட்டாயப்படுத்துகிறீர்களா? என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.
சென்னை: பொதுக்குழுவில் மாற்றப்பட்ட விதிகளை ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என்றால் இதற்கு மாற்று என்ன? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று அதிமுக வழக்கில் கேள்வி எழுப்பினர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனு
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. அதனால் அதில் இப்போது நாங்களோ, நீதிமன்றமோ முடிவு எடுக்க வேண்டியது இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று விசாரணை நடந்து வருகிறது.

தேர்தல் ஆணையம்
இந்த வழக்கில் வாதம் வைத்த தேர்தல் ஆணையம், அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணைய ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என்று வாதம் வைத்தது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் இதுவரை நீதிமன்றம் தடுக்கவில்லை. எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் ஏன் புதிய விதி முறைகளை நீங்கள் ஏற்காமல் இருந்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதில்
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை விதிமுறை மாற்றங்களை ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என்றது. இதையடுத்து கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவில் மாற்றப்பட்ட விதிகளை ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என்றால் இதற்கு மாற்று என்ன? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தால் நாங்கள் முடிவு எடுப்போம். இன்னும் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவிற்கு நீதிமன்ற அனுமதி கொடுக்கப்படவில்லை என்றனர்.

வேட்புமனு
வேட்புமனு தாக்கல் 7ம் தேதி முடிகிறது. அப்படி என்றால் 7ம் தேதிக்குள் என்ன முடிவு எடுப்பது பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்க எங்களை கட்டாயப்படுத்துகிறீர்களா? என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்றனர். இதில் உங்கள் நிலைப்பாட்டை அறிவியுங்கள் என்று நீதிபதிகள் கூறிய நிலையில், திங்கள் கிழமை பதில் அளிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

அதிமுக
இந்த தேர்தலில் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது. இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கினால் அது இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. தற்போது அதிமுகவின் இரட்டை இலை முடங்கி உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை முடங்கவில்லை. இரட்டை இலையில் அவர்கள் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications