என் மனைவிக்கு நீங்க செய்த ஹேர்கட்டை மறப்பேனா! பார்பருக்கு போன லெட்டர்.. பின்னணியில் நெகிழ்ச்சி கதை
சென்னை: நாம் செய்யும் சிறிய விஷயங்கள் ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா? அப்படி இல்லையென்றால் இது நிச்சயம் உங்களுக்கான பதிவுதான்.
இறக்கும் தருவாயில் இருந்த பெண்மணிக்கு சிகை அலங்காரம் செய்துவிட்ட கடைக்காரரின் செயலை பாராட்டி அந்த பெண்ணின் கணவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கிறிஸ்துமஸ்
"அது ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முந்தைய நாள். அன்று வழக்கம்போல நானும் எனது மனைவியும் உங்கள் கடைக்கு வந்திருந்தோம். நீங்கள் எனது மனைவியை ஒரு சாதாரண வாடிக்கையாளர் போல் அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தீர்கள். பின்னர் அவளது முறை வரும்போது அந்த நாற்காலியை எனது பக்கமாக திருப்பி அவளுக்கு முடியை வெட்டி விட்டீர்கள். அந்த தருணத்தில் அவளுடைய முகபாவனைகள் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

கடிதம்
இதனையடுத்து நாங்கள் வீடு திரும்பிவிட்டோம்" என அந்த பெண்ணின் கணவர் சிகை அலங்கரித்தவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சரி இதில் என்ன நெகிழ்ச்சி இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பொறுங்கள்! கடிதம் இன்னும் முடியவில்லை. "நாங்கள் வீடு திரும்பிய பின்னர் அவள் பல முறை கண்ணாடி முன் நின்று தனது சிகை அலங்காரத்தை மீண்டும் மீண்டும் ரசித்துக்கொண்டிருந்தாள்.

டிமென்ஷியா
உங்களுக்கு தெரியாது அவள் டிமென்ஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் என்று" இவ்வாறு அந்த பெண்ணின் கணவர் கடிதத்தில் விளக்கியுள்ளார். டிமென்ஷியா என்பது ஒரு ஞாபக மறதி நோய் என்று சொல்லலாம். அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நினைவு திறனை இழக்கத் தொடங்குவார்கள். இது அவர்களது அன்றாட வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கும். டிமென்ஷியா ஒரு நோய் என்று குறிப்பிடுவதை விட இது பல நோய்களின் பக்கவிளைவாக ஏற்படும் ஒரு இணை நோய் என்று கூட குறிப்பிடலாம்.

இணை நோய்
இது குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில்தான் அந்த பெண்மணிக்கு சிகை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே அவள் துர்திஷ்டவசமாக சமீபத்தில் இறந்துவிட்டாள். எனது மனைவிக்கு செய்ததை போன்று ஒரு நாளில் பல பேருக்கு நீங்கள் சிகை அலங்காரம் செய்திருக்கலாம் ஆனால் நீங்கள் செய்த அந்த ஹேர்கட் தனித்துவமானது.

மருத்துவ விஞ்ஞானிகள்
ஏனெனில் அதுதான் எனது மனைவியின் கடைசி ஹேர்கட். உங்கள் பணியின் சிறப்பம்சத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற விசயங்களை கடந்து சென்றுவிடுவது எளிதானதுதான்." என்று தனது கடிதத்தை முடித்துள்ளார் அந்த கணவன். யார்? எந்த ஊர்?? என எந்த தகவலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் அவர் சொல்வதைப்போல அவ(ன்/ள்) பெயர் மனதிற்கு பிடித்த எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டுமே.












Click it and Unblock the Notifications