தலைநகரமா? கொலை நகரமா? தொடரும் அரசியல் படுகொலைகள்!
சென்னை: தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மேலும் தலைநகரம் கொலை நகரமாக மீண்டும் உருவெடுத்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் இந்தத் திமுக ஆட்சிக்கு கரும்புள்ளியாக மாறியுள்ள நிலையில், இப்போது சென்னை தலைநகரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு அவரது வீட்டு முன்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தமிழ்நாட்டைத் தாண்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, இந்தப் படுகொலை குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தலித் மக்களின் வலுவான குரலாக ஆம்ஸ்ட்ராங் இருந்தார் என்று மாயாவதி கூறியுள்ளார்.

இந்தப் படுகொலையால் அயனாவரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகள் பெரிய பதற்றத்தில் உள்ளன. பொது மக்கள் அனைவரும் உறைந்து போய் உள்ளனர். பிஎஸ்பி கட்சி தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு நிலவிவருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவரது பதிவுக்கு பிஎஸ்பி உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை கூறி வருகின்றனர். இரவோடு இரவாக காவல்துறை கொலை செய்தவர்களை கைது செய்யவில்லை. அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் தாங்களாகவே முன் வந்து சரணடைந்துள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, முதல்வர் வேறு மாதிரி மாற்றி குறிப்பிடுவது அதிர்ச்சி அளிப்பதாக சிலர் பின்னூட்டம் போட்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மூன்று முறை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது கிடைத்துள்ளது. கொலை நடந்து முடிந்த பிறகு பிஎஸ்பி அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஆய்வு நடத்தி வருகிறார். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே இது காவல்துறையின் மெத்தன போக்கால் நடந்த படுகொலை என பிஎஸ்பி தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி புகார் கூறிவருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று காவல்நிலையத்தில் சரணடைந்த ஆற்காடு பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் ஆம்ஸ்ட்ராங் வசித்துவந்தார். பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் உள்ள தனது பழைய வீட்டை இடித்து அதைப் புதுப்பித்து கட்டி வருகிறார். அதன் கட்டுமானப் பணிகளை கவனிக்க தினந்தோறும் சென்று அப்பணிகளை மேற்பார்வையிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல அந்தப் பணிகளை பார்க்க சென்ற ஆம்ஸ்ட்ராங் அங்கேயே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்தக் கும்பலை தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங் நண்பர்களான பாலாஜி மற்றும் வீரமணி ஆகிய இருவருக்கும் கால், முதுகு மற்றும் காதுகளில் வெட்டுகள் விழுந்துள்ளன. மேலும் கொலையாளிகள் தப்பியோடும் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
நேற்று இரவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், சிகிச்சை பலன் தராததால் இறந்துள்ளார். இப்போது அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலையைப் பார்த்த ஆம்ஸ்ட்ராங் நண்பர் கருப்பு சட்டை அணிந்த ஒருவர் காலை முதல் இரண்டு முறை அந்தப் பகுதியை நோட்டம் விட்டதாகவும் அப்போதே தான் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அந்த நபர்தான் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், அண்ணாமலை எனப் பல தலைவர்கள் இந்தக் கொலையைக் கண்டித்துள்ளனர். சமரசமின்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களில் மட்டும் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உட்பட 3 தலித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங், சூசைநாதன், ராஜேஷ் என அவர் ஒரு பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு தலித் கொலை மாநிலமாக மாறி வருகிறதா? என்று சந்தேகத்தை முன்வைத்துள்ளார்.
இந்தத் திமுக ஆட்சியில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இப்படித் தான் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சேலத்தில் கொண்டலாம்பட்டி அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் நெல்லையில் தீபக் ராஜா கொலை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து அரசியல் படுகொலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக திமுக ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது ஜெயலலிதா போன்றவர்கள் அடிக்கடி எடுத்துக் காட்டிப் பேசி வந்துள்ளனர்.
மதுரையில் திமுக ஆட்சியில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது அதற்கு ஒரு சாட்சி. இதேப்போல 1996இல் திமுக ஆட்சியில் நடந்த அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல சாதிக்பாட்சா மரணம். 2003 ஆம் ஆண்டு தா. கிருட்டிணன் படுகொகை செய்யப்பட்டார். அப்போது ஜெயலலிதா ஆட்சி நடைபெற்று வந்தாலும், பழி என்னவோ திமுகவினர் மீதுதான் விழுந்தது.
திமுக மீது ஜெயலலிதா தொடர்ந்து இந்தக் குற்றசாட்டை முன்வைத்து வந்த காலத்தில் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அவர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக சங்கராச்சாரியார் கைது, சென்னையில் அயோத்திகுப்பம் ரவுடி வீரமணி என்கவுண்டர், வீரப்பன் என்கவுண்டர் என்று அவர் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக மக்களிடம் இந்த மாதிரியான நடவடிக்கைகள் மூலம் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.
ஆனால், இப்போது திமுக ஆட்சியில் தொடர்ந்து 3 அரசியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளன. கூடவே கள்ளச்சாராய மரணங்கள் என தொடர்கதையாகி உள்ளது. ஆகவே, இரும்புக் கரம் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதுதான் இப்போதைக்கு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications