ஆம்ஸ்ட்ராங் கேஸில் சேர்த்து விடுவேன்..மிரட்டி சிக்கிய இன்ஸ்பெக்டர் புஹாரி! ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி, தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும், தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது நீதிமன்றம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.
இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 9, 2025 அன்று காலமானார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகிலிடம் காவல் ஆய்வாளர் முகமது புஹாரி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முகமது புஹாரி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகமது புஹாரி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது முகமது புஹாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அது இன்னும் நீதிமன்றக் கோப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், முகமது புஹாரி காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் என்பதால், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும், தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.




Click it and Unblock the Notifications
