ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. ஸ்கூபா வீரர்களை களமிறக்கிய போலீஸ்! ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு.. பரபர
சென்னை: பகுஜுன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்துக் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கைதான ஹரிதரன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட செல்போன்களை போலீசார் மீட்டனர்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவர் சென்னையில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வந்த நிலையில், அதன் அருகிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
கைது: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைதாகினர். இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேநேரம் இந்தச் சம்பவம் 11 பேருடன் நிற்கவில்லை.

அடுத்தடுத்து சினிமா படம் போல இந்த படுகொலை சம்பவம் விரிகிறது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, ஹரிஹரன் எனப் பலரது பெயர்களும் இதில் அடிபட்டன. அதேபோல பாஜகவின் அஞ்சலைக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவரும் சமீபத்தில் கைதாகினார். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன்கள் மீட்பு: இதில் ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருளிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படுகொலைக்குச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போனை ஹரிதரனிடம் அருள் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து கைதான கடம்பத்தூர் பகுதி அதிமுக கவுன்சிலர் ஹரிதரனிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அவர் செல்போன்கள் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் வீசி விட்டதாகக் கூறியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தலைமறைவான அஞ்சலை! புளியந்தோப்பை கட்டுக்குள் வைத்திருந்த பெண்! யார் இவர்?
இதையடுத்து ஸ்கூபா டைவிங் வீரர்களின் உதவியுடன் அந்த செல்போன்களை மீட்கும் முயற்சியை போலீசார் தொடங்கினர். நேற்று முழுக்க இந்த பணிகள் நடந்த நிலையில், சேதப்படுத்தி வீசப்பட்ட 5 செல்போன் பாகங்களையும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கைப்பற்றினர். கொலையாளிகள் இந்த செல்போன்களை தான் பயன்படுத்தி இருக்கும் நிலையில், அதில் இருந்து தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பல முக்கிய ஆவணங்கள்: இது ஒரு பக்கம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும் பெண் தாதாவுமான அஞ்சலை வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புளியந்தோப்பில் உள்ள அஞ்லை வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 5 செல்போன்கள், பென் டிரைவ், லேப்டாப், வங்கி பாஸ்புக், டெபிட், கிரெடிட் கார்டுகள் உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த வழக்கில் கைதான ஹரிதரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், ஹரிதரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
