ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரசு மரியாதையா? உடல் அடக்க வழக்கில் தமிழக அரசை பாராட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் தொடர்பான அவசர வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 121 பேர் பலியானதை சுட்டிக்காட்டி அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வியெழுப்பினார். மேலும் தமிழக அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டதாக பராட்டிய அவர் அரசு மரியாதை அளிக்கப்படும் விஷயம் பற்றியும் கூறியுள்ளார்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே சிலருடன் பேசி கொண்டிருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவும், நேற்றும் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

armstrong chennai high court bsp

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டு இருந்த சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனை மற்றும் அவரது வீடுகளை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் வழக்கு தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் உடற் கூறாய்வுக்கு பிறகு நேற்று ஆம்ஸ்ட்ராங்கின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரம் இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை பந்தர் கார்டன் மைதானத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு அவசர வழக்காக இன்று நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடினார். ‛‛ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சியிடம் அனுமதி கோரினோம். ஆனால் சரியான பதில் இல்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை பற்றியும், அவரது செயல்பாடு, உதவிகள் பற்றியும அவர் நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.

இதையடுத்து அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடம் என்பது மிகவும் குறுகலானது. அதோடு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு 16 அடி சாலை தான் உள்ளது. இதனால் அங்கு இடநெரிசல் ஏற்படலாம். இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங்கின் வீடடில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இடம் தேர்வு செய்திருக்கிறோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம்'' என்று வாதிட்டார். அதுமட்டுமின்றி பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி என்பதை விளக்கும் வகையிலான ஆதாரங்களை வரைப்படங்களாக அவர் நீதிபதி பவானி சுப்பராயனிடம் சமர்ப்பித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார். அப்போது அவர், ‛‛அரசு சார்பில் அடக்கம் செய்ய இடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியான பகுதி, சிறிய சாலை பகுதி என்பதால் எதிர்காலத்தில் ஹத்ராஸ் போன்று அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?. எனவே பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள்.

இல்லாவிட்டால் அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு இன்னொரு இடத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். தற்போது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது. மனுதாரர்களிடம் கேட்டு கொள்ளுங்கள் உத்தரவு பறிப்பிக்கிறேன்'' எனக்கூறி வழக்கு விசாரணையை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். அதாவது உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2ம் தேதி ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேருக்கு 2.30 லட்சம் பேர் கூடினர். இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 121 பேர் வரை பலியாகினர். இத்தகைய சூழலில் தான் ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டி நீதிபதி பவானி சுப்பராயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தான் 10.30 மணிக்கு பதில் ஆம்ஸ்ட்ராங்க் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு 12 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 12 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், ‛‛நடிகர் விஜயகாந்த் மறைவின்போது அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியது. அதேபோல் எங்களுக்கும் அனுமதி தர வேண்டும்'' என்று கோரினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ‛‛குறுகலான இடம், குடியிருப்பு பகுதி என்பதால் தான் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு சார்பில் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் தர தயாராக உள்ளோம்'' என வாதிட்டார்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், ‛‛நாங்கள் அடக்கம் செய்ய தேர்வு செய்த இடம் 7,500 சதுரஅடியாகும். அது குறுகிய இடம் இல்லை. நான்கு புறமும் சாலை தான் உள்ளது'' என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இப்படி இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கு அறிவுரையாக சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுதொடர்பாக நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர் இல்லை. இறந்த நபர் நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. இதனால் அரசு நிலத்தில் அடக்கம் செய்ய பாருங்கள். இதற்காக அனுமதி கோரி விண்ணப்பம் செய்யுங்கள்'' என கருத்து தெரிவித்தார். இதன்மூலம் பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலம் வேண்டாம். அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்பதை நீதிபதி பவானி சுப்பராயன் வலியுறுத்தி உள்ளார்.

அதன்பிறகு வழக்கு மீண்டும் வழக்கு 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கட்சி அலுவலகத்துக்கு பதில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள உறவினர் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதாக அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அரசு தரப்பில் அந்த நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம். பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அரசு அனுமதியுடன் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம் அமைத்து கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் அடக்கும் செய்யக்கூடாது என்பது தான் பிச்சனை; நினைவு மண்டபம் கட்ட பிரச்சனையில்லை. அவரது பெயரில் நினைவு மண்டபம், மருத்துவமனை எது கட்ட வேண்டும் என்றாலும் அரசு அனுமதியுடன் கட்டி கொள்ளலாம்'' எனக்கூறினார்.

மேலும் இந்த வழக்கின்போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதனை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛அரசு மரியாதை அளிப்பது என்பது தமிழக அரசு சார்ந்த முடிவாகும். அதில் அரசு தான் முடிவு எடுக்கும். ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளது’’ எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+