ஆருத்ரா வழக்கில் பரபரப்பு-துபாய் தப்பிய பாஜக நடிகர் ஆர்கே சுரேஷ் சென்னை ரிட்டர்ன்- டிச.12-ல் விசாரணை
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவானதாக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே. சுரேஷ் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வரும் 12-ந் தேதி ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழ்நாட்டில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி. பொதுமக்களிடம் 30% வரை வட்டி தருவதாக கூறி 1 லட்சம் பேரிடம் ரூ2,438 கோடி மோசடி செய்தது ஆருத்ரா நிறுவனம். இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் பாஜக நிர்வாகிகளும் அடக்கம்.

ஆருத்ரா வழக்கில் சிக்கிய ரூசோவிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு பாஜகவின் ஓபிசி அணி துணைத் தலைவரான நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷுக்கும் இம்மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் ஆர்.கே.சுரேஷுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்கே சுரேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் சிக்கிய பாஜக நடிகர் ஆர்.கே. சுரேஷ், துபாய் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது. இதனால் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை போலீசார் தலைமறைவானவர்களை கண்டுபிடிப்பதற்கான லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்கே சுரேஷ் தரப்பு தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, ஆருத்ரா மோசடிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை- சென்னை திரும்பினால் லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவால் கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மேலும் டிசமபர் 10-ந் தேதி ஆர்கே சுரேஷ் நாடு திரும்புகிறார் எனவு அவர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆர்கே சுரேஷுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் தெரிவித்தபடி ஆர்.கே. சுரேஷ் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத் துறை அதிகாரிகள், ஆர்கே சுரேஷிடம் லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பாக விசாரித்தனர். அப்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தாம் நாடு திரும்பி வந்துள்ளதாக தெரிவித்தார் ஆர்கே சுரேஷ். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஆர்கே சுரேஷ் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12-ந் தேதி சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசில் ஆர்கே சுரேஷ் ஆஜராக உள்ளார். அவரிடம் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் ஆர்கே சுரேஷ் மீது நடவடிக்கைகள் பாயுமா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications