விடாது துரத்தும் ஜெ. மரணம்! ராதாகிருஷ்ணன் மீது இத்தனை புகார்களா? புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி!
சென்னை : ஜெயலலிதாவை திறன்மிகு சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதார துறையின் செயலாளர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக நீண்ட காலமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது

ஜெயலலிதா மரணம்
இன்னிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். 2017ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதிர்ச்சி தகவல்கள்
அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்ததாகவும், குறிப்பாக அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. இதில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாலர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

7 பேர் காரணம்
மேலும், ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படாததற்கு 7 பேர் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை எதிராக இருந்தது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதற்கு எதிராக இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன்
குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை திறன்மிகு சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதார துறையின் செயலாளர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது எனவும், சுகாதாரத்துறை செயலாளரின் கூற்று சரியானவை என எடுத்துக் கொண்டாலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டனர். இது இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தம் அளிப்பதாக இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications