ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் கூட ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வராத நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் களத்தில் இறங்க உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் வரும் 21ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தான், ஆம்ஆத்மி கட்சி, தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் ஆம்ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. ஆனால் தமிழக சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கவில்லை.
கெஜ்ரிவால் 2 நாள் பிரசாரம்
இப்படியான சூழலில் தான் சட்டசபை தேர்தலில் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலினுக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பாஜக எதிர்ப்பில் ஆம்ஆத்மி மற்றும் திமுக உறுதியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்தில் 2 நாள் வாக்கு சேகரிக்க உள்ளார்.
ஏப்ரல் 20-21ல் பிரசாரம்
அதன்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், அவரது ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை ஆதரித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 21 என 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் எந்தெந்த தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்? என்பது பற்றி எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த 2 நாட்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அவர் ஆதரித்து பிரசாரம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்பு பாராட்டும் ஸ்டாலின் - கெஜ்ரிவால்
முதல்வர் ஸ்டாலினுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இருவரும் நட்பாக உள்ளனர். அதோடு இருவரும் பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ளனர். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்து இருந்தார். அதோடு இருகட்சிகளும் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இப்படியான பந்தத்தினால் தான் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்.
ஏமாற்றும் ராகுல்
தமிழகத்தி்ல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே என மேலிட தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள்கட்சி மோதல் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது திமுக நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவற்றால் அவர்கள் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications