தமிழகம் 2026.. ஐபேக் மட்டுமில்லை.. இன்னொரு கம்பெனி உடனும் ஒப்பந்தம் போட்ட திமுக? வெளியான தகவல்
சென்னை: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக ஐபேக் மற்றும் ஷோ-டைம் கன்சல்டிங் ஆகிய இரு நிறுவனங்களை திமுக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த இரு நிறுவனங்களையும் அதிமுக அணுகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த இரு நிறுவனங்களும் திமுகவுடன் கை கோர்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை திமுக தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி செய்ததாக வரலாறு கிடையாது.

இதனை மாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தி வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கேற்ப திமுக தரப்பில் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கான தேர்தல் பணிகள் ஐபேக் நிறுவனத்தால் செய்யப்பட்டது. ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோரின் பணிகள் திமுகவினர் மத்தியிலும் பாராட்டப்பட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது PEN நிறுவனம் மூலமாகவே தேர்தல் பணிகள் செய்யப்பட்டன. அதன் பலனாக 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரப்புரை பணிகளுக்கான திமுக தரப்பில் 2 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஐபேக் நிறுவனத்தில் இருந்த ரிஷி ராஜ் சிங் மற்றும் ஷோ-டைம் கன்சல்டிங் நிறுவனம் தரப்பில் ராபின் சிங் ஷர்மா ஆகியோரிடம் பணிகளை வழங்கி இருக்கிறது.
முக்கியமான தேர்தல் ஆலோசகர்கள் அதிமுகவுக்கு பணியாற்றிவிடக் கூடாது என்பதால், திமுக தரப்பில் விரைவாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் பேசுகையில், திமுகவுக்கு தேர்தல் பணியாற்ற ஏராளமான தேர்தல் ஆலோசகர்கள் தேவையில்லை. ஆனால் அவர்கள் வேறு கட்சிகளுக்கு பணியாற்றிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளோம் என்றார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிமுக தரப்பில் ஐபேக் மற்றும் ஷோ-டைம் கன்சல்டிங் நிறுவனங்களை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது திமுகவுடன் கைகோர்த்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கூறுகையில், அதிமுகவுக்கு வெளியில் இருந்து தேர்தல் ஆலோசகர்கள் தேவையில்லை. பலமான ஐடி விங் உள்ளது.
அதனால் தேர்தல் ஆலோசகர்களை கொண்டு தேர்தல் பணிகளை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறி இருக்கிறார். திமுக தரப்பில் டிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் கூறுகையில், எங்களை பொறுத்தவரை வெற்றி மட்டுமே பிரதானம். தேர்தல் ஆலோசகர்களை கொண்டு வருவது தலைமையின் முடிவை பொறுத்தது. தலைமையின் அறிவுறுத்தலை பின்பற்றி நடப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications