காயம்.. ஆபரேஷன்.. அவமானம்.. பாக். மேட்சில் சொல்லி சொல்லி அடித்த "பலே" பாண்டியா.. என்ன நடந்தது?
துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா இன்று மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை தொடர் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணி டாஸ் தோற்க இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் சொதப்பி வந்தது. பாபர் அசாம் 9 பந்தில் வெறும் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஃபகார் சாமானும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
ரிஸ்வான் மட்டும் கொஞ்சம் டீசண்ட்டாக (ஆனால் திணறி திணறி) 43 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இன்று பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இல்லை என்றாலும் ஹர்திக் பாண்டியா மிக சிறப்பாக பவுலிங் செய்தார்.

ஹர்திக் பாண்டியா
இன்று இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடிய விதத்தை பார்க்கும் முன் அவருக்கு ஏற்பட்ட காயம் பற்றி பார்க்க வேண்டும். இவருக்கு கடந்த 2019 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி 20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அதே வருடம் அக்டோபரில் முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது. யு.கேவில் ஆபரேஷன் செய்து கொண்ட இவரால் நடக்கவே முடியவில்லை. முதுகில் ஆபரேஷன் செய்ததால் இவர் நிற்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

பவுலிங்
அதன்பின் நீண்ட ஓய்வு கழித்து பின்புதான் இவர் வீல் சேரில் நகர தொடங்கினார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கியவர் மீண்டும் பயிற்சியில் குதித்தார். இவரின் ஆபரேஷன் எதிர்காலத்தை மனதில் வைத்து செய்யப்பட்டது. நீண்ட காலத்திற்கு இந்த ஆப்ரேஷன் உதவும் என்று அப்போதே பிசிசிஐ கூறி இருந்தது. இங்கிலாந்தை சேர்ந்த தண்டுவட ஸ்பெஷாலிஸ்டுகளிடம் ஆலோசனை செய்து இவருக்கு இந்த ஆபரேஷனை செய்தனர்.

ஆபரேஷன்
ஆனால் இதன்பின் மீண்டும் 2020, 2021 ஐபிஎல் போட்டிகளுக்கு வந்தவரால் பவுலிங் செய்ய முடியவில்லை. இவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் பெற்றது, இந்திய அணியில் வாய்ப்பு பெற்றதே இவரின் பவுலிங் + பேட்டிங் மூலம்தான். ஆனால் ஆபரேஷன் காரணமாக இவர் பவுலிங் செய்யவில்லை,. 2021 ஐபிஎல் போட்டியிலும் அவ்வப்போது மும்பை அணிக்கு பவுலிங் செய்தார். அப்போதே மும்பை அணி நிர்வாகத்திடம் பாண்டியா எப்போது பவுலிங் செய்வார் என்று கேள்விகள் எழுந்தன. இந்த காலத்தில் ஹர்திக் பாண்டியனை பலரும் கடுமையான விமர்சனம் செய்தனர், அவமானப்படுத்தினர்.

டி 20 உலகக் கோப்பை
அதோடு கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் பெரிதாக பவுலிங் வீசவில்லை. எங்கே பவுலிங் போட்டால் முதுகில் மீண்டும் பிரச்சனை வருமோ என்பதால் இவருக்கு பவுலிங் தரவில்லை. ஆனால் நெட்டில் மட்டும் இவர் பவுலிங் பயிற்சி எடுத்தார். இவருக்கு தேவைப்படும் போது பவுலிங் கொடுப்போம்.. இப்போது ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று மட்டும் பிசிசிஐ கூறி வந்தது. கடந்த ஐபிஎல் போட்டியில் முழு பார்மிற்கு வந்த பாண்டியா குஜராத் கேப்டனாக அசத்தினார்.

குஜராத் ஐபிஎல்
அதோடு குஜராத் கேப்டனாக பவுலிங்கிலும் சிறப்பாக ஆடினார். அதை தொடர்ந்து இந்திய அணி ஆடிய அடுத்தடுத்த டி 20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக இவர் சிறப்பாக பவுலிங் செய்தார். கேப்டன்சியிலும் இவர் சிறப்பாக ஆடினார். இந்த நிலையில்தான் முக்கியமான ஆசிய கோப்பை தொடரில் இன்று ஹர்திக் பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். சிறப்பான பவுன்சர், ஸ்லோ பால் பவுன்சர் மூலம் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இப்திகார்
12.1 பந்தில் இப்திகார் விக்கெட்டை எடுத்தார் ஹர்திக் பாண்டியா. இதில் தொடங்கியது அவரின் விக்கெட் வேட்டை. அதன்பின் பெரிதாக ரன் கொடுக்காமல் கட்டுப்படுத்திய பாண்டியா 14.3 பந்தில் குஷ்த்தில் ஷா விக்கெட்டையும் எடுத்தார். அதே ஓவரில் திணறிக்கொண்டு இருந்த ரிஸ்வான் விக்கெட்டையும் எடுத்தார். இது எல்லாம் பவுன்சர் பந்துகள். பவுன்சர்களை சிறப்பாக இவர் வீசியது பாகிஸ்தான் விக்கெட்டுகளை சீட்டு கட்டு போல சரிய வைத்தது.

சிறப்பான பவுலிங்
இன்று 4 ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியா 25 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் 3 விக்கெட் எடுத்தார். இன்று அவரின் 6.20. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்த பின் அணியின் மொத்த ரிதமே மாறியுள்ளது. இவர் பவுலிங் போடுவதால் அணியின் காம்பினேஷன் சிறப்பாகி உள்ளது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை பயன்படுத்த முடிகிறது. பவுலிங்கும் முழுமை அடைந்துள்ளது. கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிடம் மிஸ்ஸான விஷயம் இந்த முறை இந்திய அணியில் முழுமை அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications