எலிக்கு வைக்கப்போய் குடும்பத்துக்கே எமனாக மாறிய “மருந்து”.. பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனம் மீது வழக்கு!
சென்னை: எலி மருந்து நெடியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் பலியான நிலையில், பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு வீட்டில் மருந்து வைத்த தினகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எலி மருந்து வைக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறை நிபுணர்கள் முகக்கவசம் அணிந்து ஆய்வில் ஈடுபட்டனர். அந்த நேரத்திலும் நெடி அதிகமாக இருந்துள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், 6 வயதில் வைஷ்ணவி என்ற மகளும், ஒரு வயதில் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். கிரிதரனும், அவரது மனைவி பவித்ராவும் வங்கியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் குடியிருக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பில் எலித் தொல்லை அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், தி.நகரில் செயல்படும் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள், வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்தும், வீடு முழுவதும் எலிகள் வராமல் இருப்பதற்காக மருந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்கம்போல ஏ.சியை போட்டுவிட்டு தூங்கி உள்ளனர்.
இதனையடுத்து அந்த எலி மருந்தில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் பரவி அறையில் இருந்த நான்கு பேருக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காற்றில் பரவிய எலி மருந்தின் நெடி, ஏ.சி அறையில் பரவியதன் காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எலியைக் கட்டுப்படுத்த மருந்து வைத்த தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு வீட்டில் மருந்து அடித்த தினகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கவனக்குறைவாகச் செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி மருந்தை அடித்த நபர்களில் ஒருவரான சங்கரதாஸ் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
அந்த எலி மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சு, இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எலித் தொல்லை அதிகமாக இருந்ததால், மொத்த எலிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என நினைத்து எலி மருந்து வைக்க, அதுவே, குடும்பத்துக்கு எமனாக மாறியுள்ளது.
தடயவியல் துறை துணை இயக்குநர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மூடப்பட்ட ஏசி அறையில் எலி தொல்லைக்காக வைக்கப்பட்ட மருந்தின் ரசாயனம் பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. வீட்டில் எலி மருந்தின் நெடி அதிகமாக இருந்தால் முகக் கவசம் அணிந்து சென்று தடயவியல் உதவித்துறை இயக்குநர் ஜெயந்தி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications