சட்டசபையில் உச்சகட்ட மோதல்- திமுக கூட்டணிக்கு குட்பை சொல்லும் வேல்முருகன்-பாமகவுடன் கை கோர்க்கிறாரா?
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான பண்ருட்டி தி.வேல்முருகன், சபாநாயகர் இருக்கை முன்பாக உரத்த குரலில் பேசியது, அமைச்சர்களை கை நீட்டி ஒருமையில் பேசியது உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. வேல்முருகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினே பரிந்துரைத்தார். இந்த கசப்புகளால் இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் நீடிக்க வாய்ப்பில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் வேல்முருகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

திமுகவுடன் தொடர் மோதல்
திமுக கூட்டணியில் இடம் பெற்ற போதும் பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகிறார் வேல்முருகன். ஒரு கட்டத்தில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் வேல்முருகன் மிரட்டல் விடுத்திருந்தார். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்; திமுக கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். இதனால் வேல்முருகனின் அதிருப்தி குறைந்ததாகவே பார்க்கப்பட்டது.
சட்டசபையில் மோதல்
இந்த நிலையில் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து வேல்முருகன் இன்று மீண்டும் பிரச்சனையை கிளப்பினார். சபாநாயகர் இருக்கை முன்பாக சென்று உரத்த குரலில் பேசினார் வேல்முருகன். அப்போது அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல்வர் கண்டனம்- சபாநாயகர் எச்சரிக்கை
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, வேல்முருகன் பேசும் போது சபையில் அமர்ந்து கேட்பது வழக்கம்தான். ஆனால் சில நேரங்களில் அதிகபிரசங்கித்தனமாகவும் நடந்து கொள்கிறார். அமைச்சர்களை வேல்முருகன், கை நீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது என்பது ஏற்புடையதும் அல்ல; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் இறுதி எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.
திமுக கூட்டணிக்கு குட்பை?
கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணியில் முறுக்கிக் கொண்டு நிற்கும் வேல்முருகன், இப்போது சட்டசபையில் பகிரங்கமாகவே மோதல் போக்கை வெளிப்படுத்திவிட்டார். இதனால் இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் இடம் பெறுவது சந்தேகம்தான்.
பாமகவுடன் கை கோர்க்கும் வேல்முருகன்?
அதேநேரத்தில், வேல்முருகன் எந்த கூட்டணிக்கு செல்வார் என்கிற கேள்வியும் எழுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக எந்த பாமகவை எதிர்த்து வடதமிழ்நாட்டில் வேல்முருகன் அரசியல் செய்து வந்தாரோ அதே பாமகவுடன் நட்புறவை பாராட்டி வருகிறார் வேல்முருகன். அண்மையில் பாமகவின் நிழல் நிதி அறிக்கையை அக்கட்சி நிர்வாகிகள் வேல்முருகனிடம் கொடுத்தனர். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வேல்முருகன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனால் வட தமிழ்நாட்டில் பாமகவுடன் கைகோர்த்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை வேல்முருகன் எடுத்துவிட்டாரா? என்கிற கேள்வியும் எழுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வடதமிழ்நாட்டில் பாமக + தவாக?
வட தமிழ்நாட்டில் வன்னியர்கள பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாக பாமக இருக்கிறது; பாமகவில் இருந்து வெளியேறி அனைத்து தமிழ்ச் சமூகத்துக்குமான கட்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை வேல்முருகன் தொடங்கினார்; ஆனாலும் அவரது அடிப்படையான தொண்டர் பலம் என்பது வன்னியர்களை சார்ந்தே இருக்கிறது. வட தமிழ்நாட்டில் வன்னியர்களைக் கொண்ட இந்த இரு பெரும் கட்சிகளும் இணைந்து களம் காண்பது என்பது சட்டசபை தேர்தலில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை மறுக்கவும் முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications